
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தந்தை பெரியார் பேசியதாக சில சொற்களை கூறினார். தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
பெண்கள் உறவு குறித்து பெரியார் கூறியதாக சீமான் பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. திராவிடர் கழகம், திமுக, த.பெ.தி.க., திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சீமான் மீது புகார்கள் அளித்தன. அந்த வகையில், பெரியார் குறித்து அவதூறை பரப்பிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
ஆனால், அந்த புகார் மனு மீதான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மணப்பாறை போலீசார், அந்த வழக்கை முடித்து வைத்தனர். இதையடுத்து வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் குமார், இதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என முரளி கிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், பெரியார் குறித்து பேசிய சீமானுக்கு எதிரான ஆதாரங்களை முரளி கிருஷ்ணன் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பெண்களுக்கு எதிராக பேசிய பிரிவு உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.