/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pollachin.jpg)
தமிழகத்தில் கடந்த 2018 - 19ஆம் ஆண்டுகளில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று, ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்’ ஆகும். இளம் பெண்கள், மாணவிகள் எனப் பலரையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட இந்த சம்பவத்தினை ‘நக்கீரன்’ இதழ் அம்பலப்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் என மொத்தம் 9 பேர் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் அரசு சார்பில் 50 சாட்சிகள்; 200 ஆவணங்கள்; 40க்கும் மேற்பட்ட மின்னணு தரவுகள் முக்கிய சாட்சியாக இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கின் விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் சாட்சி விசாரணைகள் ஏற்கனவே முழுமையாக நிறைவடைந்தது. அந்த வகையில் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி அடுத்த கட்டத்திற்குச் சென்றது.
இந்த வழக்கில் அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின்தரப்பு என இருதரப்பு வாதங்களும் அரசுசார்பில்பதில் வாதமும் இன்று முடிவடைந்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கின் தீர்ப்பை வரும் மே 13ஆம் தேதி தெரிவிக்கப்படும் எனக் கோவை மகிளா நீதிமன்றம் அறிவித்தது.
பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு தேதியை அறிவித்த சில மணி நேரத்திலேயே, அவ்வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, திடீரென கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்து, மொத்தமாக 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்து உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளது. அதே போல், சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, விழுப்புரம் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)