
பா.ஜ.க மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “உள்நாட்டில் இருந்து கொண்டு இந்த நாட்டிற்கு எதிராக பேசுவதையே அவர்களுடைய அரசியல் கலாச்சாரமாக கடைபிடித்து வரும் திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்டுகள், கர்நாடகா முதல்வர் சித்தராமையா போன்றவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தானுக்கு எதிராக யுத்தம் கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இருக்கின்ற அரசாங்கத்திற்கு எதிராக பேச வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோளே தவிர, இந்த நாட்டு மக்களுடைய பாதுகாப்பு பற்றி இல்லை.
உலக அளவில், இஸ்லாமிய பயங்கரவாதத்தை தலைமைய ஏற்று நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஹமாஸ, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தான். இவர்கள் பெருவாரியான பேர் பாகிஸ்தானில் இருந்துதான் செயல்படுகிறார்கள். எல்லா பயங்கரவாதத்திற்கும் ஊற்று கண்ணாக இருப்பது பாகிஸ்தான். அந்த ஹமாஸினுடைய தாக்குதலால் இஸ்ரேலில் 1400 பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். ஆனால், அங்கு இஸ்ரேலில் இருக்கின்ற எல்லோரும், அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்த தேசத்தில் தான், வெளிநாட்டில் இருக்கின்ற தேச விரோதிகளை விட உள்நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாருமே வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால், அமெரிக்காவில் யாரும் நாட்டுக்கு விரோதமா பேசுவதில்லை. இங்கே மட்டும் தான், இந்த தேசத்துக்கு எதிராக பேசக்கூடிய இழிந்த ஜென்மங்கள் இந்த தேசத்திலே அதிகமாக இருக்கிறார்கள். அதன் காரணமாக தான் பாகிஸ்தான் போன்ற இந்திய விரோத கொள்கை கொண்ட நாடுகளுக்கு இங்கே தாக்குதல் நடத்த சுலபமாகி போகிறது.
அதனால், நீங்கள் தேசத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மதத்தை பார்த்து கொலை செய்கின்ற அளவிற்கு மத வெறி கொண்ட ஒரு சம்பவமானது நடந்திருக்கிறது. அதை நியாயப்படுத்தி பேசுகிறார்கள். இந்த திருமாவளவனுக்கு நியாயமே தெரியாதா? அவருக்கு நாட்டு பற்றே இருக்காதா?. நாட்டுக்கு எதிராக பேசுவது தான் இவருக்கு நிலைமையா? நாளைக்கு ஒரு யுத்தம் வருமானால் இந்த தேசத்திற்கு எதிராக இவர்கள் நடப்பார்கள். எனவே அரசாங்கம் இப்பொழுதே இவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டும் இல்லையென்றால் நாட்டுக்கு ஆபத்தாக போய்விடும்” என்று காட்டமாக கூறினார்.