Skip to main content

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அமைச்சர்கள் வாழ்த்து!

Published on 28/04/2025 | Edited on 28/04/2025

 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, அமைச்சராகப் பதவியேற்றார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதை செந்தில் பாலாஜி தரப்பு ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் (28.04.2025) தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் வகித்த வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்குக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. அதே போல், செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் பேசி சர்ச்சையில் சிக்கிய பொன்முடியும் தனது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே அவர் வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறையை, பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவை மாற்றங்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.  மேலும் புதிய அமைச்சருக்கான பதவியேற்பு விழா இன்று (28.07.2025) மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூடுதலாக மின்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் நேற்று (27.04.2025) சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதே போன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ். முத்துசாமி கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளதையொட்டி வாழ்த்துப் பெற்றார். அதோடு அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வனத்துறை மற்றும் காதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளதையொட்டி முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும் மனோ தங்கராஜ் புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளதையொட்டி முதலமைச்சரைச் சந்தித்துச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

சார்ந்த செய்திகள்