Skip to main content

அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை கோரி வழக்கு!- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

chennai high court tamilnadu government

 

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை செய்ய, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி-யின் பச்பன் பச்சோ அந்தோலன் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் 2015-ல் இயற்றப்பட்ட சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு) சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்புடன் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இச்சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. சிறார் நீதி சட்டம் வரையறுத்துள்ள தரத்தின் அடிப்படையில் சிறுவர்கள் காப்பகம் இல்லை. சிறார் நீதி சட்டம் அமல்படுத்தப்படுவதை, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிறார் நீதி வாரியம், குழந்தைகள் நல ஆணையத்தில் பதவிகள் காலியாக உள்ளன. 

 

சிறார் நிதி வாரியத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.  மாவட்டம் தோறும் சிறப்புச் சிறார் காவல் பிரிவு, சிறார் நலக் காவல் அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த நியமனங்களுக்குப் பின்பற்றப்படும் நடைமுறை என்ன? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

 

சிறார்களின் மறுவாழ்வுக்கு, விரிவான வரைவு வழிகாட்டி விதிகளை வகுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.’ எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜனவரி 20- ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினாவில் அருங்காட்சியகம்; மக்களின் பங்களிப்பை நாடும் தமிழ்நாடு அரசு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 The Tamil Nadu government will make a request to the people on Independence Day Museum at Marina

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் எதிரே பிரம்மாண்ட சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் 75ஆவது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.