Skip to main content

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக பாஜக பேரணி!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நாடு முழுக்க போராட்டங்கள் வலுவாகி வரும் நிலையில் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வன்முறை இந்தியா முழுக்க பரவுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

 

BJP rally in support of CAA

 



இந்நிலையில் இச்சட்டத்திற்கு  ஆதரவு  தெரிவித்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா சார்பில் ஊர்வலம்  நடைபெற்றது. அதன்படி ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை ஈரோடு பா.ஜ.க.வினர் நடத்தினார்கள்.

இன்று காலையிலிருந்தே பாஜகவினர் காலிங்கராயன் விருந்தினர் மாளிகை அருகே திரண்டனர். இதனால் ஒரு வித பதட்டமும் பரபரப்பும் ஈரோட்டில் ஏற்பட்டது. பிறகு  ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பா.ஜ.க.வின் தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, "குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி மிக தெளிவாக விளக்கி விட்டார். இந்த சட்டத்தால் 130 கோடி இந்திய மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்று கூறிவிட்டார். ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த சட்டம் குறித்து தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். மக்களிடையே அவர்கள் தான்  பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். 

அமைதியாக இருக்கும் தமிழகத்தில் டெல்லி போன்று கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். தமிழகத்திலும் இந்த சட்டத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவே குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேரணி நடத்துகிறோம்" என்றார்.

முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை  தூண்டுவோர் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். பாஜகவினர் இந்த  ஊர்வலத்தையொட்டி ஈரோடு பெருந்துறை சாலை  ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. பெருந்துறையில் இருந்து ஈரோடுக்கு வரும் வாகனங்கள் சம்பத் நகர் வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.