
தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், துறை சார்பில் மானியக் கோரிக்கை மீதான காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. அதே வேளையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (17-04-25) மாலை 6 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்கள் குறித்தும் விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டசபையில், இன்று சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.