
தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் உடனுறை உலக அம்மன் கோவிலின் குடமுழுக்கு விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
தென்காசி கோயிலுக்கு என்று ஒரு சிறப்பு உள்ளது. 1457 ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டிய மன்னனால் கோவில் கட்டுமானம் தொடங்கப்பட்டு, 1518 ஆம் ஆண்டு இப்பணிகள் அழகன் குலசேகர பாண்டிய மன்னனின் தலைமையில் நிறைவு பெற்றன. 600 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோவிலில் வழிபடுவதன் மூலம் வடகாசியில் வழிபட்ட புண்ணியத்தை பெறலாம் என நம்பப்படுகிறது. நாரதர், அகத்தியர், இந்திரன், மிருகண்டு முனிவர், வாலி மற்றும் நந்தி ஆகியோர் இந்த கோயிலில் வழிபட்டுள்ளனர் என்றும் நம்பப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்குக்குப் பிறகு 2024 ஏப்ரல் 7 ஆம் தேதிதான், அதாவது 18 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற்றதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதற்காக பாதுகாப்பு பணிகளில் எந்த குறைபாடும் வந்துவிடக்கூடாது என்பதில் காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர் என்பது, அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் மூலம் தெள்ளத்தெளிவாக விளங்கியது. சுமார் 10 நாட்களாக இரவுபகல் பாராமல் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்று திட்டமிடப்பட்டதாக தென்காசி மாவட்ட காவல்கண்காணிபாளர் அரவிந்தன் தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 ஏடிஸ்பிக்கள், 12 டிஎஸ்பிக்கள், 36 காவல் ஆய்வாளர்கள், 138 உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நான்கு ரத வீதிகளிலும் நகரின் முக்கிய பகுதிகளிலும் போக்குவரத்து காவல்துறையினர், சீரான போக்குவரத்தை உறுதி செய்தனர். தென்காசி நகரில் ஏற்கனவே 1000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் செயல்பாட்டில் இருந்த போதிலும், கூடுதலாக குடமுழுக்கு அன்று 120 ஃபேஸ் ரெககனேஷன் சிசிடிவிக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பிற்காக சாதாரண உடையிலும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஒலிப்பெருக்கி மூலம் நகைகளை அணிந்து செல்வோருக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. \குடமுழுக்கு நடைபெற்ற காலை நேரத்தில் கூட்டத்தை கண்காணிக்க காவல்துறை சார்பில் 5 ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டன. இப்படி, குடமுழுக்கு அன்று 4 ரதவீதிகளும், கோயிலும் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்ததால் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடைபெறாமல் குடமுழுக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்களும் முழு ஈடுபாட்டுடன் தங்கள் வழிபாட்டை நிறைவு செய்தனர்.ஒரு சின்ன அசம்பாவிதம் கூட இல்லாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய காவல்துறையினர் மிகச்சிறப்பான திட்டமிடலோடு பணியாற்றினர்.