Skip to main content

70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021
bike accidents

 

ஏற்காடுக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் மலைப்பாதையில் 70 அடி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் இளம்பெண் பலியானார். பலத்த காயம் அடைந்த அவரது கணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த காசிம் மகன் பாபு (35). இவருடைய மனைவி சசிகலா (32). பொங்கல் விழாவையொட்டி, ஜன. 14ம் தேதி கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்த தம்பதியினர், மாலை 3 மணியளவில் மலையை வீட்டு கீழே இறங்கியுள்ளனர்.  

 

மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குள்ள 70 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில், பள்ளத்தில் உள்ள ஒரு பாறையில் சசிகலாவின் தலை மோதியுள்ளது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். பாபுவுக்கு கை, கால், தலை, உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

 

bike accidents in yercaud

 

உயிருக்குப் போராடிய நிலையிலும் கூட பாபுவே, 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களை மீட்க போராடினர். இதற்கிடையே தகவல் அறிந்த ஏற்காடு காவல்துறையினரும் நிகழ்விடம் விரைந்தனர்.

 

விபத்து நடந்த இடம் 70 அடி பள்ளம் என்பதோடு, புதர் மண்டிய பகுதியாகவும் இருந்தது. அதனால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கயிறு கட்டி, பள்ளத்தில் இறங்கினர்.

 

சடலத்தை முதலில் மீட்டனர். பின்னர் பாபுவையும் கயிறு மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பாபுவை மீட்டனர். அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இச்சம்பவத்தால் ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினரின் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசல் சீரடைந்தது. 70 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் பெண் பலியான சம்பவம் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tourist vehicle overturns on mountain road More than 10 people injured

வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த 19 பேர் நேற்று மினி பேருந்தில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனையடுத்து ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்துவிட்டு ஏற்காட்டில் இருந்து சென்னை திரும்புவதற்காக இன்று மதியம் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்தில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்காடு மலையடிவாரத்தின் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே மினி பேருந்து வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி மினி பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விபத்தில்  சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் ஏற்காடு மலையடிவாரத்தில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. 

Next Story

பள்ளிக்கு தந்தையுடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
Eight year old school kid passes away in chidambaram accident

சிதம்பரம் நகரில் உள்ள காரைக்காட்டு சொக்கலிங்கம் தெருவில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மகள் ஜனுஷிகா (8). சிதம்பரம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஜனுஷிகா 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜம்புலிங்கம் இன்று காலை தனது மகளை பள்ளியில் கொண்டு விடுவதற்காக பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். 

சிதம்பரம் அருகே சிலுவைபுரம் புறவழிச் சாலையின் மேம்பாலத்தின் கீழே பைக் சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தவறி கீழே விழுந்த ஜனுஷிகாவின் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சிறுமி ஜனுஷிகா மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தை ஜம்புலிங்கத்திற்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ஜம்புலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஜனுஷிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் பணிகளை செய்வதாலேயே இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.