
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்(23). குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனனி பிரியா(23). இருவருக்கும் கல்லூரி படிக்கும் காலத்தில் பழக்கம் ஏற்பட்டு, அது பின்பு காதலாக மாறியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் லோகேஷ் - ஜனனி பிரியா காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறிய கடந்த ஏப்ரல் 17-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரும் பாதுகாப்பு கேட்டு நேற்று வேலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையறிந்துகொண்ட பெண் வீட்டார் எஸ்.பி அலுவலகத்திற்கு உள்ளேயே சென்று காதல் ஜோடியை தாக்க முயற்சி செய்து ரகளையில் ஈடுபட்டனர்.
எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடியை தாக்க முயற்சி செய்து, ரகளையில் ஈடுபட்டதை கண்ட ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட பெண் வீட்டாரை தடுத்து நிறுத்தி சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்து சென்று அங்கு விசாரணை மேற்கொண்டு வருகிறனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வீட்டார் ரகளை செய்த சம்பவம் எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் மேஜர் வயதுடையவர்கள் என்பதால் அவர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி உள்ளனர்.