Skip to main content

“எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் திமுக” - ஓபிஎஸ் கண்டனம்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

OPS condemns “DMK for destroying livelihood of future generations”.

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை முறையாக நிரப்ப எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான கல்லூரிகளில் பொறுப்பு முதல்வர் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக மாதம் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்து இருப்பதைப் பார்க்கும்போது, நிரந்தரமாக கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க இந்த அரசு முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.

 

மாதம் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் அரசுக் கல்லூரிகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும்போது, நிரந்தர ஆசிரியர்களின் ஊதியத்தை அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கையில், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, பயிற்றுவிக்கும் ஆர்வமும் குறையும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவியரின் படிப்பும் பாதிக்கக்கூடும். பொதுவாகவே, பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது என்பது உயர் கல்வியைப் பாதிக்கும் செயலாகும். மேலும், முனைவர் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களை எல்லாம் வெறும் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிப்பது என்பது ஆசிரியர் தொழிலையே அவமதிப்பதற்கும் சமம். ஒருவேளை, தற்போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும், ஒருசில ஆண்டுகள் கழித்து அவர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளையாவது அரசு வகுக்க வேண்டும்.

 

அப்பொழுதுதான், கவுரவ விரிவுரையாளர்களும் ஆர்வமாக பணியாற்றுவார்கள். இல்லையெனில், அவர்களுடைய ஆர்வம் குறைவதோடு, தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளத்தில் நிரந்தரப் பணி கிடைக்குமேயானால், அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும்.

 

எனவே, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தரமான உயர் கல்வியைப் பெற்று அதன்மூலம் வேலைவாய்ப்பினை அடையும் வகையில், அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் முறையினை கைவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்