Skip to main content

உதயகுமார் ஓவர் ஆக்ட்..! எட்டு மாதத்தில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும்..! வாகை சந்திரசேகர் பதிலடி..!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020
vagai chandrasekar

 

 

வேளச்சேரி திமுக எம்எல்ஏவும், நடிகருமான வாகை சந்திரசேகர் நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அனைத்து வியூகங்களும் தோல்வியடையும் என்றும், அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் கூறினார்.

 

மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மூன்று நாள் போதுமானதா? 

 

சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கலந்து கொண்டார். குறைந்தது 15 நாள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று எவ்வளவோ போராடி பார்த்தார். அப்போதுதான் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முடியும் என்று கேட்டதற்கு அவர்கள் அடம் பிடித்து மூன்றே நாளில் முடித்துவிட்டார்கள். முதல் நாள் இரங்கல் கூட்டத்தோடு முடிந்துவிட்டது. இரண்டாவது நாள் பெரியதாக எந்த விவாதத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. 

 

மிகவும் திட்டமிட்டே இதனை செய்ததுபோல் இருக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடத்திருக்கிறது. கரோனா விவகாரத்தில் ஏகப்பட்ட தவறுகள் நடந்திருக்கிறது. அதனை பட்டியலிடலாம் என திமுக இருந்தது. நீட் தேர்வு விவகாரத்தில் நிறைய தற்கொலைகள், அமைச்சர்கள் மீதான ஊழல் பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை திமுக எடுத்து வைக்கப்போகிறது என்பதாலும், திமுகவின் கேள்விகளுக்கு பயந்தும் மூன்றே நாளில் திட்டமிட்டு முடித்துவிட்டார்கள். விருந்தும் மருந்தும் மூன்று நாள் என பழமொழி சொல்வார்கள். இவர்கள் சட்டமன்றம் மூன்று நாள்தான் என்று புதிதாக சொல்லி முடித்துவிட்டார்கள். 

 

சட்டப்பேரவையில் நீட் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியிருக்கிறாரே? 

 

ரொம்ப ஆவேசமாக பேசியதாலேயே பிரச்சனையை மூடி வைத்துவிடலாம் என நினைக்கிறார். முதல்வர் பேசிய ஆவேசத்தைவிட இந்த ஆட்சியைப் பார்த்து மக்கள் அதைவிட ஆவேசத்தோட தயாராக இருக்கிறார்கள். அந்த மக்களோட ஆவேசத்தின் முன்பு முதல்வரின் ஆவேசம் தோற்றுப்போகும். வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் யாருடைய ஆவேசம் வெற்றி பெறும் என்று தெரிய வரும், மக்கள் தயாராக இருக்கிறார்கள். 

 

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவைவிட பாஜக அதிக வியூகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறதே?

 

பாஜக தனியாக வியூகம் வகுத்தாலும், அதிமுக தனியாக வியூகம் வகுத்தாலும், இரண்டு கட்சிகளும் சேர்ந்து வியூகம் வகுத்தாலும், இன்னும் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் இவர்களின் அனைத்து வியூகங்களும் தோல்வியில்தான் முடிவடையும். இனிமேல்தான் இவர்கள் வியூகம் அமைத்து திட்டமிடப்போகிறார்கள். ஆனால் திமுக மக்களோடு மக்களாக இணைந்து தயாராக இருக்கிறோம். மக்களின் உணர்வுகளோடு இணைந்து இருக்கிறோம். தேர்தல் களம் பதில் சொல்லும், வெற்றி திமுகவுக்குத்தான்.

 

எட்டு மாதத்தில் திமுக ஆட்சி என பேசுகிறார்கள். திமுக பேசும் கதை, வசனம் மக்களிடம் எடுபடாது என அமைச்சர் உதயகுமார் பேசியிருக்கிறார்...

 

எங்க தலைவர் கலைஞரோட கதை, வசனம் எடுபட்டதால்தான் 50 ஆண்டுகாலம் கழித்தும் இன்றும் மனோகரா, பராசக்தி வசனத்தை பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல கதை, வசனத்தின் மூலமாக தமிழர்களுடைய பெருமையையும், பகுத்தறிவு சிந்தனைகளையும், அரசியல் சிந்தனைகளையும் மக்களுக்கு எடுத்துச் சென்றார். 

 

ஆனால் உதயகுமார் இப்போது திரைக்கதை, வசனம், நடிப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மக்கள் மத்தியில் காட்டுகிறார். இவரைப்போல் நாங்கள் ஓவர் ஆக்ட் பண்ணவில்லை. யதார்த்த வாழ்க்கையை அவர்கள் கண்முன் காட்டும் கண்ணாடியைப்போலத்தான் திமுக இருக்கிறது. எட்டு மாதத்தில் திமுக வெற்றி பெறுவதுமட்டுமல்ல, எட்டு மாதத்தில் திமுகவின் மாபெரும் வெற்றியையும் பார்க்கப்போகிறீர்கள். அதிமுகவின் மிகப்பெரிய தோல்வியையும் பார்க்கப்போகிறீர்கள்.



எட்டு மாதத்தில் திமுக மாபெரும் வெற்றியடைவதோடு, அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று வாகை சந்திரசேகர் மிக உறுதியாக கூறியிருக்கிறார். அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. இதில் 2021 சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. தேர்தல் களம் சூடு பிடித்தள்ள நிலையில் மக்களின் தீர்ப்பே இறுதியானது என்பதால் பொறுத்திருப்போம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான்” - பாலகிருஷ்ணன்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் சி.பி.எம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி, சி.பி.எம்.கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, கனகராஜ், பாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம். கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவரை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வரலாறு காணாத வெற்றியை பெற்றோம். அதுபோல இம்முறையும் மாபெரும் வெற்றி பெறவேண்டும். கூட்டணி தர்மத்தை மதிக்க கூடிய கலைஞர் வழியில் வந்த கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில், திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை மாபெரும் வெற்றிபெற செய்வதன் மூலம் நாம் நம் கழகத்தலைவரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாக இருக்கின்றன. கூட்டணி கட்சியின் சின்னத்தை ஒவ்வொரு இல்லம்தோறும் சென்றடையும் வண்ணம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி இந்திய அளவில் பேசும்படி செய்யும் வண்ணம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும்” என கூறினார்.

அடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி சார்பாக சச்சிதானந்தம் போட்டியிடவில்லை. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்தான் போட்டியிடுகிறார். அதுபோல் அண்ணன் அமைச்சர் ஐ.பெரியசாமி தான் போட்டியிடுகிறார் என நினைத்து நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. சின்னம் வரைவதில் முக்கியமில்லை. அந்த சின்னத்தை மக்கள் மனதில் நிறுத்துவதில்தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எப்படி ஸ்டாலின குரல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் ஒலித்ததோ, அதுபோல சிபிஎம் கட்சியின் சின்னமும் அனைத்து இல்லங்களிலும் தெரியும் வண்ணம் தேர்தல் பணியாற்ற வேண்டும். மாபெரும் வெற்றியை நாம் நமது முதல்வருக்கு தெரிவிக்கும் வண்ணம் திமுக நிர்வாகிகள் இன்றே களப்பணியை தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

இறுதியாக சிபிஎம் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும் போது, “கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதற்கு காரணம் எங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கேட்க தொடங்கினால் காலநேரம் செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தலில் வெற்றியை இலக்காக செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களும், உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களும் குறுகிய காலத்தில் இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் மூலம், திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்திருப்பது அவர்களின் தேர்தல் பணியின் சுறுசுறுப்பை எடுத்துக்காட்டுகிறது. திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் பெறும் வெற்றி இந்திய கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் வெற்றியாக இருக்கும்.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். உச்சநீதிமன்றமே பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்தபோது, ஆளுநர் ஏன் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசின் ஜனநாயக விரோதப் போக்கே. இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி தமிழக முதல்வருடைய வெற்றி. அமைச்சர் ஐ.பெரியசாமியின் வெற்றி;  அமைச்சர் சக்கரபாணியின் வெற்றி. பம்ரபமாய் சுழன்று தேர்தல் பணியாற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றி என்று திமுக மற்றும் சிபிஎம். கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நினைத்து வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக - காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

இந்நிலையில். திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். இதனையடுத்து 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் மார்ச் 24 ஆம் தேதி தனது பரப்புரையைத் தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.