Skip to main content

’இதுவரை சத்ரியனாக இருந்தேன்; இனிமேல் நான் சாணக்கியன்’ - டி.ஆர். பஞ்ச்

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
trk

 

சாதாரண கேள்விகளுக்கே வெடிக்கும் டி.ராஜேந்தர், இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், வெறுப்பேற்றுவது மாதிரியான கேள்விகளுக்கும் வெடித்து தள்ளாமல்  நிதானமாக பதிலளித்தார்.   முன்னெல்லாம் வேகப்பட்டேன்.   இனிமேல் விவேகமான ராஜேந்தர்தான் என்று தனது புதியபாதையை காட்டினார்.   


இயக்குநரும், இலட்சிய திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவருமான  டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர்,   ‘’வரும் 3ம் தேதி லட்சிய திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.   கோவை, ஈரோடு மாட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருக்கிறேன்’’என்றார்.  மேலும், தான் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதால் இந்திப்படம் இயக்கவிருக்கிறேன் என்று தெரிவித்தார்.  

 

trk

 

புதுப்புது அறிவிப்புகளாக வெளியிடுகிறீர்கள். அதைச்செய்வேன் இதைச்செய்வேன் என்று சொல்லிகொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் கட்சியில் எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லையே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’என்னை வெறுப்பேற்றி என்ன டென்ஷன் பண்ணினாலும் பரவாயில்லை.  சில பேர் கட்சிக்கு பெயர் வைக்காமலேயே ஆரம்பிக்கபோறேன் ஆரம்பிக்கப்போறேன்னு பில்டப் கொடுத்திக்கிட்டே இருக்குறாங்களே’’ என்று ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சனம் செய்தார். 


பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று   இருக்கையில், உங்க அரசியல் குரு என்று சொல்லும் கலைஞரின் புகைப்படம் ஏன் இல்லை? என்ற கேள்விக்கு,   ’’கலைஞரை என் இதயத்தில் வைத்துள்ளேன்’’ என்று சமாளித்தார்.

 

tr3

 

திமுகவிற்கு மீண்டும் செல்வீர்களா என்ற கேள்விக்கு,  ’’எந்த கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் என்னை மதிக்காமல் கூப்பிட்டால்  போக மாட்டேன்.  நான் ராஜதந்திரி.  ஜோதிட ரீதியாக எனக்குத்தெரியும் அடுத்து யார் ஆட்சி என்று.....’’என்று இழுத்தவரிடம்,  


அடுத்து யார் ஆட்சி...? என்ற கேள்விக்கு,  ‘’அதை இப்போது சொல்லமாட்டேன்’’ என்றார் எஸ்கேப் ஆகி, தனது மகன் சிம்பு நடிப்பில் வெளிவரும் மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தைப்பற்றியும், பீப் பாடல் எதிர்ப்பாலும், நடிகர் சங்க , தயாரிப்பாளர் சங்க எதிர்ப்பாலும்,  அன்பாவனவன் அடங்காதவன் அசராதவன் படத்தினால் சிம்புவுக்கு நேர்ந்த தொல்லை(?)களையும் சொல்லி, இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் சிம்புவை நடிக்க அழைத்து, நடிக்க வைத்து, அந்த படத்தை திரைக்கு கொண்டு வரும் மணி ரத்னத்திற்கு நன்றி தெரிவித்தார்.  

 

பீப் பாடலை நியாயப்படுத்தி பேசியதால் செய்தியாளர்கள் ஆவேசமான போது,   ‘’நீங்கள் என்ன விமர்சனம் செய்தாலும் எல்லாத்தையும் தாங்கக்கூடிய சக்தியை இறைவன் கொடுதிருக்கிறான்.    முன்னெல்லாம் சத்ரியன் ராஜேந்தரை பார்த்திருப்பீர்கள்.  இனிமேல் நான் சாணக்கியன்தான்.  முன்னெல்லாம் வேகப்பட்டேன்.   இனிமேல் விவேகமான ராஜேந்தர்தான்’’என்று சொல்லி சிரித்தார்.

 

சார்ந்த செய்திகள்