
நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலினை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு.
ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்வாரா?. அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என முதல்வர் மு.க. ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய். ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து தம்பியை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.யார் அந்த தம்பி? இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்?. அத்தனையும் நாடகம். திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்.
ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள். முயற்சியை ஒருபோதும் கைவிடாதே. தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே- வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.