Skip to main content

“உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகள் மனிதாபிமானமற்றது” - பெ.சண்முகம் 

Published on 20/05/2025 | Edited on 20/05/2025

 

  Supreme Court  words are inhumane says Shanmugam

அகதிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகள் மனிதாபிமானமற்ற தன்மையுடன் சட்டவரம்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கவலையோடு பார்க்கிறது என அக்கட்சியிம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை தமிழர் ஒருவர் தன் குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், இலங்கைக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகள் மனிதாபிமானமற்ற தன்மையுடன் சட்டவரம்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கவலையோடு பார்க்கிறது.

அகதியாக அங்கீகரிப்பதா, இல்லையா என்பது குறித்த பிரச்சனையில் சட்டப்படியான நிலைபாட்டை எடுப்பதோ, கோரிக்கையை ஏற்றுக்கொள்வதோ, நிராகரிப்பதோ நீதிமன்றத்தின் உரிமை. ஆனால், அகதிகள் மற்றும் குடியுரிமை குறித்த பிரச்சனைகள் அரசாங்கத்தின் கொள்கையோடு சம்பந்தப்பட்டதே தவிர நீதிமன்றங்கள் அசுதிகள் பிரச்சனைகள் குறித்த கொள்கைகளை வரையறுக்க முடியாது. மனித மாண்புகள் குறித்து சமூகம் மற்றும் சட்டத்தின் பார்வைகள் முன்னேற்றகரமான வடிவங்களை பெற்றிருக்கும் நிலையில் இந்தியா என்ன தர்மசத்திரமா, வேறொரு நாட்டுக்குப் போ என்று நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் அமர்வின் வார்த்தைப் பயன்பாடுகள் முற்றிலும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவை. இன்னொரு நாட்டுக்கு போகச் சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. 

இந்தியாவில் இருக்கலாமா, இல்லையா என்பது குறித்த பிரச்சனையில் இந்தியாவில் தங்குவதற்கு இடமில்லை என்று சொல்லலாம். அதைத்தாண்டி தர்மசத்திரம், இன்னொரு நாட்டுக்கு போ என்பதெல்லாம் சட்டத்திற்கும், மனித மாண்புகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள், உச்சநீதிமன்றத்தின் இந்த அமர்வின் இந்த வார்த்தை பயன்பாடுகள் எந்த ஆவணங்களிலும் இடம்பெறக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. மேலும், சமீப காலத்தில் தீர்ப்பின் பகுதியாக அல்லாமல் தங்கள் சொந்த கருத்துக்களை நீதிபதிகள் தனிப்பட்ட அவதானிப்புகள் என்கிற முறையில் பிற்போக்குத்தனமான பொருத்தமற்ற கருத்துக்களையும் வார்த்தைகளையும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே, இந்திய தலைமை நீதிபதி இந்த பிரச்சனையில் தலையிட்டு இதுபோன்ற மொழிகள் உச்சநீதிமன்ற வார்த்தைப் பயன்பாடுகளில் இல்லாமல் உறுதி செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்