
கோவில் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒரத்தி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது ஒரத்தி கிராமம். இந்த கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா குடியேற்றத்துடன் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் இத்திருவிழா 22 நாட்கள் தொடர்ந்து நடைபெறுது வழக்கம் ஆகும். அந்த வகையில் நேற்று (19.05.2025) 4ஆம் நாள் திருவிழா சித்திராங்கைமாலையீடு, நாக கன்னி மாலையீடு என உற்சவம் நடைபெற்றது. அச்சமயத்தில் இரும்பினால் செய்யப்பட்ட தேர் டிராக்டரில் வைத்து இரவு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது ஹாஸ்பிட்டல் தெருவில் இந்த தேர் வந்தபோது உயர் மின்சார கம்பி மீது உரசியுள்ளது. இதில் தேர் முழுமையாக எரிந்தது தேரில் இருந்த ராம்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் சிவா, ஜானகிராமன், குப்பன் மற்றும் ஆதிகாசன் ஆகிய 4 பேர் படுகாயம இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 4 பேரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஒரத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.