
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். ஆரணி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் இவர், கடந்த 2011-2016 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். அப்போது, சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்தாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் உசிலம்பட்டி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நீதிபதியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் சேவூர்ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. டாஸ்மாக் வழக்கில் நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டுகள் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.
டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்? பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.