Skip to main content

அமித்ஷாவின் ஊழல் குறித்த பேச்சு; பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி!

Published on 10/04/2025 | Edited on 10/04/2025

 

DMK RS Bharathi responds to Amit Shah

மத்திய அமைச்சர் அமித்ஷா, “திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது” எனக் குற்றம்  சாட்டியிருந்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அமித்ஷாவின் பேச்சு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஊழலை ஒழிக்கிறேன்” என ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி என்ன செய்தார்? எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கே ’ஊழல் புகார்’ என்ற கேடயத்தைப் பயன்படுத்தினார். மோடி பேசிய ’அச்சா தின்’ (நல்ல நாள்) எல்லாம் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்குத்தான், அவர்களின் வளர்ச்சிக்குத்தான் ‘வளர்ச்சி’ நாயகன்’ உழைத்தார். அவையெல்லாம் முறைப்படுத்தப்பட்ட ஊழல்கள்தான்.

ஒன்றிய அரசின் திட்டங்களில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்தியது ஒன்றிய தலைமை கணக்குத் தணிக்கை அமைப்பின் (CAG) அறிக்கை. 2023-ல் வெளியிட்ட சி.ஏ.ஜி அறிக்கையில் 7 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மோசடி அம்பலத்துக்கு வந்தது. பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிக் கட்டண வசூல், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தி மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்.) விமான எஞ்ஜின் வடிவைமைப்பு, ரயில்வே நிதி ஆகியவற்றில் நடந்த முறைகேடுகளால் மத்திய அரசுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது.

ஊழல்வாதிகளைக் காப்பாற்ற 2018 ஊழல் தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது மோடி அரசு. பொது ஊழியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றால் அந்த துறையின் தலைமை அதிகாரியிடம் சி.பி.ஐ-யும் லஞ்ச ஒழிப்புத் துறையும் அனுமதி பெற வேண்டும் எனச் சட்டத்தையே மாற்றினார் மோடி. இதனால், ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. அந்தத் துறையின் உயர் அதிகாரியே ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தால் அனுமதி தாமதிக்கப்படுகிறது. உயர் அதிகாரி அனுமதி மறுத்துவிட்டால் புகார் அத்துடன் குழிதோண்டிப் புதைக்கப்படும்.

அமித்ஷா தமிழகம் வரும் போதெல்லாம் அப்போது யார் ஆட்சி செய்து கொண்டிருந்தாலும் ஊழல் அரசு எனப் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அப்படிதான் 2018 ஜூலை 9 சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா ‘நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாகத் தமிழகம் உள்ளது’’ என்றார். அப்போது எடப்பாடி ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது.  அடுத்த ஆண்டே அந்த எடப்பாடி பழனிசாமியோடுதான் 2019 நாடாளுமன்றத் தேர்தலை அமித்ஷா சந்தித்தார். அதன் பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது.

எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளிலும் அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட வருமானவரித் துறை அமலாக்கத் துறை சோதனைகள் எல்லாம் என்ன ஆனது? என்பதை அமித்ஷா தமிழ்நாடு வரும் இந்த நேரத்தில் சொல்லுவாரா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த ஊழல்கள், ரெய்டுகள், சிபிஐ விசாரணைகள், அமலாக்கத் துறை சோதனைகள் எல்லாமே நாடகம்தான். எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பணிய வைக்கத்தான் அவை பயன்படுத்தப்பட்டன. ஊழலை ஒழிக்கவில்லை. அந்த ஊழல் புகார்களை வைத்து கூட்டணி பேரம் இன்று வரை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாஜகவின் கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்