டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரியும், மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்தும் அக்கட்சியின் தமிழகத் தலைவர் வசீகரன் காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற மக்களைவைத் தொகுதியின் உறுப்பினருமான துரை வைகோ, வசீகரனைச் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாகத் துரை வைகோ எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அந்தக் கைதை கண்டித்தும், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை விடுதலை செய்யக்கோரியும் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி இன்று 5 ஆவது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவரும் ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் வசீகரனை நேரில் சந்தித்தேன்.
மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான உங்கள் போராட்டத்தில் நாங்களும் உடன் நிற்போம். அரவிந்த் கெஜ்ரிவால் முக்கியத் தளபதிகளில் ஒருவராக இருக்கின்ற வசிகரனின் உடல் நலம் கருதியும், ஆம் ஆத்மி கட்சியின் நலன் கருதியும் இந்தக் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என, வசீகரனிடம் உரிமையுடன் கேட்டுக் கொண்டேன். என் மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவராகத் திகழும் அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய அரசியலில் குறுகிய காலத்தில் உயர்ந்திருக்கிறார். 2012 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. 2013இல் அடுத்த ஆண்டே நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 30 விழுக்காடு வாக்குகள் பெற்றதோடு இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்தது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு மொத்தம் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றி 54 விழுக்காடு வாக்குகள் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மீண்டும் மூன்றாவது முறையாக, 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது.
அத்தோடு, 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 92 இடங்களில் வெற்றிபெற்று அங்கேயும் ஆட்சி அமைத்தது. கிட்டத்தட்ட 4 மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெற்று தேசிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி கட்சி. குறுகிய காலத்தில் இப்படிப்பட்ட வளர்ச்சி வேறு எந்த இயக்கத்திற்கும் சாத்தியப்படவில்லை. அவருடைய வளர்ச்சியை விரும்பாத மத்திய பாஜக அரசு அவரையும், ஆம் ஆத்மி கட்சியையும் முடக்கும் நோக்கத்தோடு இப்படியொரு பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. அதே போல, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லியின் துணை முதல்வர் மனிஷ் சிஷோடியாவை கைது செய்து 16 மாதங்களும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சய் சிங்கை கைது செய்து 6 மாதங்களாகவும் சிறையில் அடைத்து வைத்தது மத்திய பாஜக அரசு.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. மீண்டும் அதே குற்றச்சாட்டிற்காக அவர் மீது சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக தனது கட்சி தொண்டர்களிடையே உணர்ச்சிகரமாகப் பேசினார். அப்போது, ‘சிறையில் என்னை என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் பகத்சிங்கின் சீடன். அவர் நாட்டை விடுவிக்கச் சிறை சென்றார். நான் நாட்டை காப்பாற்றச் சிறைக்குச் செல்கிறேன். பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். எனக்கும் சிறைவாசத்தைப் பற்றியோ, மரணத்தைப் பற்றியோ துளியும் அச்சமில்லை. என் உடம்பின் ஒவ்வொரு துளியும், என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டிற்காகவே’ என்று சொன்னார்.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் மட்டுமில்லாமல் பல மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜகவின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராகவே அனைத்து இடங்களிலும் முழங்கினார். அவருடைய விடுதலைக்காக, சர்வாதிகாரத்தை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளான காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்து சக்திகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக முன்வைக்க விரும்புகிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து மீண்டு வருவார். டெல்லி முதல்வராக மீண்டும் தனது மக்கள் பணிகளைத் தொடர்வார். சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அவரது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி தமிழகத் தலைவர் வசீகரன் தற்போதைய நிலையில் உடல் தளர்வோடு இருக்கிறார். அவருடைய பங்களிப்பு ஆம் ஆத்மி கட்சிக்குத் தேவை. அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும். எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலைக்கான களத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், மதிமுகவும் உறுதியாக உடன் நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.