Skip to main content

“நீதிமன்றமே மோடி அரசை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” - இரா. முத்தரசன் பேட்டி!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

"The court itself is in a position to criticize the Modi government" - R. Mutharasan interview!

 

மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் தி.நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது, “மத்திய அரசினுடைய நடவடிக்கைகளைக் கண்டித்து இங்கு ஆர்ப்பாட்டம் நடப்பது போல, மாநிலம் முழுவதும் 2,000 மையங்களில் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மிக முக்கியமான கோரிக்கை என்பது கொடிய கரோனா தொற்றின் காரணமாக மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

 

அதேபோல் பலியின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையின் வேகம் நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களையும் மிக கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. இப்படிபட்ட ஒரு சூழலில் மத்திய அரசாங்கம் மய்யமாக நடந்துகொள்ளாமல் நாட்டின் பிரதமர் தடுப்பூசிகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை வழங்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்கிறார். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் மிக கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். ஆக்சிஜன் வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது என்பதை அறிந்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து தனியாக ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அதேபோல் தடுப்பூசிதான் ஒரே தீர்வு என்று பிரதமர் எல்லா இடங்களிலும் சொல்லிவருகிறார். ஆனால் தடுப்பூசி வழங்குவதில் 6 கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு 16 சதவீதம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளார். 

 

"The court itself is in a position to criticize the Modi government" - R. Mutharasan interview!

 

8 கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு வெறும் 6 சதவீத ஒதுக்கீட்டை செய்துள்ளார். இப்படி பாரபட்சமாக நடந்துகொள்ளும் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தனது வருத்தத்தை தெரிவித்து மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளது. மத்திய அரசு தடுப்பூசிக்கு மூன்றுவிதமாக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாடு உட்பட வேறு சில மாநிலங்களிலும் பலரும் இறந்துள்ளார்கள். அதற்கு மத்திய அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அனைத்து நீதிமன்றங்களும் மத்திய அரசினைக் கடுமையான விமர்சனம் தெரிவித்திருக்கும் இந்த நிலையில், ஜனநாயகத்தின் மீது  நம்பிக்கையுள்ள பிரதமராக இருந்திருப்பாரேயானால் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். மேலும், மிக கடுமையான நெருக்கடி திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. நேற்றோடு ஒரு மாத காலம்தான் நிறைவடைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒருமாத காலத்தில் செய்ய வேண்டிய நிர்பந்தமும், கட்டாயமும் ஏற்பட்டு அரசு மிக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது” என கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்