Skip to main content

“எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் வலிக்கிறது?” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி!

Published on 21/05/2025 | Edited on 21/05/2025

 

CM MK Stalin says Why does Edappadi Palaniswami hurt

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் திட்ட கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் எனும் அமைப்பு  2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குதல், திட்டங்களை வடிவமைத்தல் போன்ற முக்கிய பணிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி (ex officio chairman) செயல்படுகிறார். அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களுடன் கூடிய யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களைக் கொண்ட நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு குழு அமைக்கப்பட்டது.  அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆட்சி மன்ற குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் வரும் 24ஆம் தேதி (24.05.2025) டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்களது மாநிலங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிருந்தது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக வரும் 23ஆம் தேதி இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார்.

இத்தகைய சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார். அன்று 2ஜி - க்காக அப்பா டெல்லி சென்றார். இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?. படுத்தே விட்டாரய்யா... எல்லாம் தம்பி படுத்தும் பாடு. யார் அந்த தம்பி?” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24ஆம் தேதி டெல்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?. ‘பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது’ என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் புலிகேசி யாக மாறி வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?.

CM MK Stalin says Why does Edappadi Palaniswami hurt

இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை. பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை. கலைஞரின் கரம் பற்றி நடந்த கை. எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன். ஊர்ந்து போகமாட்டேன். இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்