
தமிழக அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது மற்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே இருப்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட பத்து மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காததால் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 2வது முறையாக அனுப்பியும் அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 142வது அரசியலமைப்பு சட்ட விதியை பயன்படுத்தி நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. அதோடு, மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஒப்புதல் வழங்கப்பட்ட மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க கூடிய அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்ட பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்நிலையில் துணைவேந்தர்கள் நியமனம் அதிகாரம் குறித்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழக அரசு சார்பில் இடமாற்ற மனு (Transfer Petition) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு மே 26ஆம் தேதி (26.05.2025) நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் திபாகர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. துணைவேந்தர்கள் நியமன சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அந்த உத்தரவிற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகத் தமிழக அரசின் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட உள்ள நிலையில் அந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கும் வகையில், அனைத்து மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தப்பட்டு இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.