
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலை நடத்தியது, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பு என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வந்தது.
அதனை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, “பஹல்காம் தாக்குதல் நமது வரலாற்றில் மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்று. இந்த தாக்குதலை ஏற்பாடு செய்ததன் பாகிஸ்தான் மோதலை தொடங்கியது. அதற்கு பதிலாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. நாம் பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.