
சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் - பிஜாப்பூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது அபுஜ்மத் என்ற பகுதி. இங்குள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக நேற்று (21.05.2025) கூட்டு குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கூட்டு குழுவினர் அங்கு சென்றனர். அதன் பின்னர் நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சல்கள், கூட்டு குழுவினர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதே சமயம் நக்சல்களை சுற்றிவளைத்த கூட்டு குழுவினர் தகுக்க பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 27 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவரும், கூட்டு குழுவினரிடமும் சிக்காமலும் தலைமறைவாக இருந்த நக்சல்களின் முக்கிய தலைவரான நம்பாலா கேசவராவ் என்கிற பசவராஜூ என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் 27 நக்சல்களின் உடல்களை ஐ.ஜி பஸ்தர் பி. சுந்தர்ராஜ் மற்றும் பிற காவல் அதிகாரிகள் இன்று (22.05.2025) ஆய்வு செய்தனர். மேலும் அபுஜ்மத் வனப்பகுதியில் இந்த மோதலின் போது மீட்கப்பட்ட ஆயுதங்களை ஐ.ஜி பஸ்தர் பி. சுந்தர்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளில் பயங்கர துப்பாக்கிகளும் அடங்கும்.
மேலும் இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில டி.ஜி.பி. அருண் தேவ் கவுதம் கூறுகையில், “நக்சல்கள்அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ராய்ப்பூரில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். பசவ ராஜு (நக்சல் தலைவர்) யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் நக்சலிசத்தின் உச்சபட்ச தலைவராக இருந்தார். 2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதிலும் இருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சரின் உறுதிப்பாடுகொண்டுள்ளார். ஆனால் அதற்கு முன்னாள் இது நடந்தால் நல்லது” எனத் தெரிவித்தார்.