
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த பிலாமி நகரைச் சேர்ந்தவர்கள் கணேசன் - ஜெமீனா தம்பதியினர். இந்த நிலையில் ஜெமீனாவுக்கும் அடைக்கலாபுரம் செபஸ்தியார் தெருவை சேர்ந்த அந்தோணி பிச்சைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய ஜெமீனா அந்தோணி பிச்சையை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த ஜவகர் என்பவர் உதவி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணேசன் தனது நண்பர் ஜெகதீஷை நேற்று முன்தினம்(21.5.2025) ஜவகரின் வீட்டிற்கு பஞ்சாயத்து பேச அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஜவகரிடம், தனக்கும் தனது மனைவி ஜெமீனாவுக்கு இனி எந்த தொடர்பும் இல்லை என்று எழுதிவைத்திருந்த கடிதத்தை கொடுத்து கையெழுத்து வாங்கி தருமாறு கணேசன் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜவகர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஜெகதீஷின் காலில் வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களை ஜெகதீஷ் ஏற்கனவே உயிரிழ்ந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜவகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.