
சிவில் நீதிபதிகள் நியமனம் மற்றும் அதற்கான போட்டித் தேர்வில் பங்கேற்பது தொடர்பான பல்வேறு உத்தரவுகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று (20.05.2025) வழங்கியுள்ள தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். சிவில் நீதிபதிகளாக நீதித்துறை பணியில் சேர்வதற்குக் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர்கள் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவைத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பாக வழங்கி இருக்கிறது.
சிவில் நீதிபதி தேர்வில் கலந்துகொள்வதற்கு ஒரு அடிப்படைத் தகுதி என்பது வேண்டும் எனவும் இந்த தீர்ப்பு மூலம் தெரியவந்துள்ளது. அதே சமயம் ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்வு நடவடிக்கைகளை இந்த தீர்ப்பு பாதிக்காது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இந்த தீர்ப்பு அடுத்த ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரும் என்ற உத்தரவையும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீர்ப்பிற்கு முன்னதாகவே இந்த தீர்ப்பின் அடிப்படையில் உயர் நீதிமன்றங்கள் ஏற்கனவே ஜூனியர் பிரிவில் சிவில் நீதிபதிகளை நியமன செய்யும் நடைமுறையைத் தொடங்கியுள்ளதால் இந்த தீர்ப்பின் மூலம் தற்போதைய நியமனத்திற்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்ற விளக்கத்தையும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞராக 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற நடைமுறை என்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக உத்தரவாக மத்திய அரசின் சார்பில் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் அந்த உத்தரவு அதன் பிறகு இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கினுடைய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.