
மத்தியில் கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் திட்ட கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குதல், திட்டங்களை வடிவமைத்தல் போன்ற முக்கிய பணிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி (ex officio chairman) செயல்படுகிறார்.
மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தின் மூலம் ஜனவரி 1, 2015ஆம் ஆண்டு அன்று நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களுடன் கூடிய யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களைக் கொண்ட நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு, அமைச்சரவை செயலகத்தின் அறிவிப்பின் மூலம் பிப்ரவரி 16, 2015 அன்று நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆட்சி மன்ற குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நிலையில் இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் வரும் 24ஆம் தேதி (24.05.2025) டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்களது மாநிலங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடந்த நிதி ஆயோக் கூட்டத்தைத் தமிழகம் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.