
தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்து வருபவர் விஷ்ணு தேவ் வர்மா. இவரது அலுவலகமும், குடியிருப்பும் ராஜ்பவன் என்று சொல்லப்படும் ஆளுநர் மாளிகை வளாகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. இங்கு எப்பொழுதும் பலத்த பாதுகாப்பு நிறைந்து காணப்படும். யாராக இருந்தாலும் முறையான அனுமதி பெற்ற பின்னரே உள்ளே செல்ல முடியும். இந்நிலையில் ராஜ் பவனில் உள்ள சுதர்மா பவனில் அமைந்துள்ள முதல் தளத்தில் கம்யூட்டர் சம்பந்தப்பட்ட அறைகள் உள்ளது. இந்த அறைகளில் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு (14.05.2025) மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து, மறுநாள் காலையில் அலுவலகத்திற்கு வந்த ராஜ்பவன் அதிகாரிகள் அங்குள்ள பொருட்கள் கலைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பார்த்து ஏதேனும் பொருட்கள் காணாமல் போயுள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது 4 கம்யூட்டர்களில் இருந்த ஹார்ட் டிஸ்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் முக்கிய அறிக்கைகள் கொண்ட ஹார்ட் டிஸ்க்கள்கள் இருந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். இந்த சி.சி.டி.வி. காட்சிகளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒருவர் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜ்பவன் அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் ராஜ்பவனுக்கு சென்று அங்கு பணிபுரியக்கூடிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் ஒரு ஊழியர் மட்டும் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்தார். இதன் காரணமாக அவரிடம் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளது. எப்போதும் பரப்பாகக் காணப்படும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள ராஜ்பவனில் கணினியில் சேமிக்கப்பட்ட ஆவணங்கள் திருடு போன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.