Skip to main content

மூதாட்டி எடுத்த சோக முடிவு- பரபரப்பான கருங்கல்பாளையம்

Published on 22/05/2025 | Edited on 22/05/2025
Elderly woman jumps into Cauvery in Karungalpalayam; Police investigate

ஈரோட்டைச் சேர்ந்தவர் விஜயா (66). இவரது கணவர் பழனிசாமி 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். விஜயா வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். மகள்கள் வீடு மற்றும் மகன் வீட்டில் மாறி மாறி வசித்து வந்தார். தற்போது விஜயா பள்ளிபாளையத்தில் உள்ள மகள் வீட்டில் வசித்து பவானியில்  வீட்டு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விஜயா உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று காலை வழக்கம்போல் மகள் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு பையுடன் விஜயா வெளியே வந்தார். ஈரோடு பள்ளிபாளையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக காவிரி பாலம் உள்ளது. இங்கு பழைய பாலம், புதுபாலம் என இரண்டு பாலம் உள்ளது. புதுபாலம் வழியாக நாமக்கல் திருச்செங்கோடு பள்ளிபாளையம் வழியாக ஈரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் வருகிறது. அதைப்போல் ஈரோட்டில் இருந்து நாமக்கல் பள்ளிபாளையம் திருச்செங்கோடு வழியாக செல்லும் வாகனங்கள் பழைய பாலம் வழியாகச் சென்று வருகிறது. எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்த பாலத்துக்கு கீழ் காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. தற்போது தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. இந்நிலையில் இன்று புதுபாலம் வழியாக வந்த விஜயா திடீரென பாலத்தின் தடுப்புச் சுவர் மேல் ஏறி காவிரி ஆற்றில் குதித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கு பரிசலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களும் மூதாட்டியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த மூதாட்டி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சிறிது நேரத்தில் மிதக்கத் தொடங்கியது. இதையடுத்து பரிசலில் சென்ற மீனவர்கள் அவரது உடலை மீட்டு கரையோரம் வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் மூதாட்டி எதற்காக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்? குடும்ப பிரச்சனையா? அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா?  என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்