
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதன் கவர்னர் சக்தி காந்ததாஸ், 'பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்' என அறிவித்துள்ளார்.
பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வராத நிலை உள்ளது. நான்கு சதவீதத்திற்கு கீழ் பணவீக்கம் இருக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி இலக்காக வைத்திருக்கும் நிலையில் விலைவாசி உயர்வைக் குறிக்கும் பணவீக்கம் அதிகமாக இருக்கும் பொழுது கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படமாட்டாது. அதேநேரம் வட்டி விகிதத்தை குறைக்கவும் முடியாது. எனவே ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது மட்டுமல்ல கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாற்றமில்லாமல் இதேநிலை தொடர்வது குறிப்பிடத்தகுந்தது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்பில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.