
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் எம்.எல்.ஏ அபு அஸ்மி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி எனப் பேசியிருந்தார். அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவுரங்கசீப் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எம்.எல்.ஏ அபு அஸ்மியின் இந்த பேச்சு, மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் எம்.பி நவ்நீத் ராணா, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவரை தொடர்ந்து, பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கைகளுக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், சம்பாஜிநகரில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகளான பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் கடந்த 17ஆம் தேதி நடத்திய போராட்டத்தில் திடீரென்று கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட சிலரை, மாநில அரசு கைது செய்தது. முகலாய மன்னரான அவுரங்கசீப் கல்லறை பிரச்சனை தேசிய அளவில் பேசுபொருளானது.
இந்த நிலையில், அவுரங்கசீப் கல்லறை பிரச்சனை தேவையற்றது என்று ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவுரங்கசீப் கல்லறை பிரச்சனை தேவையற்றது. அவர் இங்கே தான் இறந்தார். அதனால், கல்லறை கட்டப்பட்டது. சத்ரபதி சிவாஜி மகாராஷ், அப்சல் கானின் கல்லறையைக் கட்டுவதன் மூலம் ஒரு முன்மாதிரியாக இருந்தார். இது இந்தியாவின் தாராள மனப்பான்மையையும், அனைவரையும் உள்ளிடக்கிய தன்மையையும் காட்டுகிறது. கல்லறை அப்படியே இருக்கும். அதை பார்க்க விரும்புவோர்கள் யாராக இருந்தாலும் அதைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.