Skip to main content

புத்தகங்களோடு ஓடிய சிறுமி;  “இது மனிதாபிமானமற்றது” - உ.பி அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்

Published on 01/04/2025 | Edited on 01/04/2025

 

Supreme Court slams UP government for bulldozer Action to Girl viral video

உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை உடனுக்குடன் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், வீடுகலை புல்டோசர்களை கொண்டு இடித்ததற்காக உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் சில பேர், ஆக்கிரமித்து வீடு கட்டியதாகக் கூறி அம்மாநில அரசு புல்டோசர்களால் இடித்துள்ளது. இதில், அம்பேத்கர் நகரில் ஒரு இடிப்பு நடவடிக்கையின் போது சிறுமி ஒருவர் புத்தகங்களை வைத்துக் கொண்டு வீடுகளை புல்டோசர் இடித்துத் தள்ளுவதைப் பார்த்தவாறு அங்கிருந்து ஓடினார். இது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. 

இந்த சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த புல்டோசர் நடவடிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏஎஸ் ஓகா மற்றும் புயான் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘வீடுகள் கட்டப்பட்ட நிலத்தை, 2023ஆம் கொலை செய்யப்பட்ட ரவுடி அதிக் அகமதுவுக்கு சொந்தமானது என அதிகாரிகள் தவறாக அடையாளம் கண்டுள்ளனர்’ என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘இடிக்கப்பட்ட வீட்டிற்கு வெளியே ஒரு சிறுமி புத்தகங்களை வைத்து கொண்டு ஓடிய பார்க்கக் கூடிய வீடியோ வந்துள்ளது. இது போன்ற காட்சிகளால், அனைவரும் மிகவும் கலக்கமடைந்துள்ளனர். புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இது மனிதாபிமானமற்றதும் கூட.. இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இதனால், அவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இது போன்ற ஒவ்வொரு வழக்கிலும் ரூ.10 லட்சம் இழப்பீடு உத்தரப் பிரதேச அரசு தர வேண்டும். இதை ஈடுசெய்வதற்கு இது தான் ஒரே வழி. 

இந்த வழக்குகள் எங்கள் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. மனுதாரர்களின் குடியிருப்பு வளாகங்கள் இடிக்கப்பட்டுள்ளன. தங்குமிடம் பெறும் உரிமை, இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை அதிகாரிகள், குறிப்பாக மேம்பாட்டு ஆணையம் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வாறு இடிப்பு நடவடிக்கை மேற்கொள்வது சட்டப்பூர்வ மேம்பாட்டு ஆணையத்தின் உணர்வின்மையைக் காட்டுகிறது’என்று கூறி உத்தரப் பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்