
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பா.ஜ.கவின் கூட்டணியில் இருந்து விலகும் தவறை மீண்டும் செய்யவே மாட்டேன் என மாநில முதல்வர் நிதிஷ் குமார் உறுதிப்பட தெரிவித்துள்ளார். பீகாரின் பாபு ஆடிட்டோரியத்தில் கூட்டறவுத்துறை சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ் குமார், “நான் இரண்டு முறை தவறு செய்தேன். ஆனால், இனிமேல் அது நடக்காது. கட்சியில் இருந்தவர்கள் சிலரின் தவறான வழிகாட்டுதலால் இரண்டு முறை பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டேன். ஆனால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு மீண்டும் வெளியேற மாட்டேன். முன்னாள் பிரதார் அடல் பிஹாரி வாஜ்பாய் தான் என்னை முதல்வர் ஆக்கினார். முன்பு ஆட்சியில் இருந்தவர் என்ன செய்தார்கள்?. அவர்கள் முஸ்லிம்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றனர். ஆனால், சமூகங்களுக்கு இடையிலான மோதல்களை ஒருபோது நிறுத்த முடியவில்லை. 2005இல் எனது அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்பு, பீகாரில் சரியான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நல்ல கல்வி வசதிகள் இல்லை. ஆனால், அதன் பின்னர் முன்னேற்றங்கள் இருக்கின்றன” என்று கூறினார்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 1990களில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தது. 2014இல் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்த நிதிஷ் குமார், 2015இல் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து அம்மாநில சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வராக பணியாற்றினார். அதன் பின்னர், அந்த கூட்டணியில் இருந்து விலகி 2017இல் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
இதனையடுத்து, பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார் 2022இல் மீண்டும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். இதற்கிடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக, நிதிஷ் குமார் எடுத்த முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது. இதனிடையே நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்தும் பீகாரில் இருக்கும் மகா கூட்டணியிலிருந்தும் விலகி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.