Skip to main content

லக்கிம்பூர் வன்முறை: மத்திய இணை அமைச்சர் மகன் மீது கொலை வழக்கு பதிவு!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

lakhimpur incident

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரிலும் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

 

இந்நிலையில் லக்கிம்பூர் பகுதியில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா, அரசு விழாவில் பங்கேற்க சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி மத்திய இணை அமைச்சர் மகனின் காரை முற்றுகையிட முயன்றுள்ளனர்.

 

அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்றைய வன்முறையின்போது காயமடைந்த பத்திரிகையாளர் இன்று உயிரிழந்தார். இதனால் லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

 

இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க வந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அதேபோல் வன்முறை நடைபெற்ற லக்கிம்பூர் பகுதிக்கு வரவிருந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாதல், பஞ்சாப் மாநில துணை முதலமைச்சர் சுகிந்தர் ரன்தவா ஆகியோர் லக்னோ விமான நிலையம் வர உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது. மேலும், லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் இணைய சேவை தாற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இதனிடையே, விவசாயிகளின் புகாரின் பேரில் 14க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்