இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியான நிலையில் காசாவை விட்டு ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்களை கொல்லும் இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடை தயார் செய்து அனுப்ப முடியாது என கேரளாவில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம், கண்ணூர் அருகே உள்ள கூத்துபறம்பு தொழிற்பேட்டையில் மரியதாஸ் அப்பாரல்ஸ் என்ற ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தை கேரளாவைச் சேர்ந்த தாமஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நாட்டு ராணுவத்திற்காக சீருடைகளை தைத்து தயார் செய்து இஸ்ரேலுக்கு அனுப்பி வருகிறது. இஸ்ரேல் நாட்டு ராணுவத்திற்கு மட்டுமல்லாமல் பிலிப்பைன்ஸ்,கத்தார்,குவைத் போன்ற நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவத்திற்கு சீருடைகளை தயார் செய்து அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த நிறுவனத்திற்கு, இஸ்ரேல் ராணுவத்திற்காக 1 லட்சம் சீருடைக்கான ஆர்டர் வந்திருந்தது. இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் கடும் போர் சூழல் ஏற்பட்டு ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இதனால், இஸ்ரேல் ராணுவம் பல அப்பாவி மக்களை கொல்வதாக கூறி இஸ்ரேல் ராணுவத்திற்காக தைத்து வைத்திருந்த சீருடைகளை தாமஸ் என்பவருடைய நிறுவனம் அனுப்ப மறுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இஸ்ரேல் கொடுத்த 1 லட்சம் சீருடைக்கான ஆர்டரையும் ரத்து செய்துவிட்டது.