
ஒன்றாம் வகுப்பு படித்து வரும் ஆறு வயது சிறுமியை பள்ளியின் தலைமை ஆசிரியரே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று காரில் வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்தது.
குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்த ஆறு வயது மாணவி திடீரென காணாமல் போனதாக பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். தொடர்ந்து சிறுமி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறுமியை பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்த் நாட் காரில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தின் போது சிறுமியை காரில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர், காரில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி பயத்தில் கத்தி கூச்சல் போட்டுள்ளார். எங்கே சிறுமி காட்டி கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கோவிந்த் நாட் கொலை செய்துள்ளார். மாலை பள்ளி முடியும் வரை காத்திருந்த தலைமை ஆசிரியர், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பள்ளி வளாகத்தை விட்டுக் கிளம்பியவுடன் சிறுமியின் உடலை பள்ளி வளாகத்திற்கு கொண்டு வந்து வீசி சென்றுள்ளார்.
அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் கோவிந்த் நாட்டை போலீசார் கைது செய்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு படித்து வரும் ஆறு வயது சிறுமிக்கு அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.