
குஜராத் மாநிலம் கட்ச் அருதே உள்ள காந்திதாம் பச்சாவ் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகே மர நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மர நிறுவனத்தில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று (31.03.2025) திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது நிறுவனத்தில் உள்ள பிற பகுதியிலும் பரவி உள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காந்திதாம் நகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அருகில் உள்ள பெட்ரோல் பங்கின் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பொதுமக்களையும் காவல்துறை வெளியேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. மர நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கிழக்கு கட்ச் துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சவுத்ரி கூறுகையில், “காந்திதாம் பச்சாவ் நெடுஞ்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பற்றிய தகவல் எங்களுக்குக் கிடைத்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.