Skip to main content

தோழியை விமானி அறையில் அனுமதித்த விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு அபராதம்

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

dgca fine thirty lakhs for air india limited dubai to delhi flight

 

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் விமானியாக இருந்த ஒருவர் தனது பெண் தோழியை விமான பைலட்டின் கட்டுப்பாட்டு அறையான காக்பிட்டில் அமர வைத்துள்ளார். இது குறித்த புகார் ஒன்று விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) அளிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் இதில் சம்பந்தப்பட்ட பெண் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர் ஆவார். இருப்பினும் இந்த சம்பவம் நடந்த அன்று அந்த பெண் விமானத்தில் பயணியாக சென்றது தெரியவந்தது. பாதுகாப்பு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விமான பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்த விமானியின் இந்த செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது. விமானி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன் அவரது விமான ஓட்டுநர் உரிமமும் 3 மூன்று மாதக் காலத்திற்கு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது விமானியின் இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.