Skip to main content

“உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் மனித மாண்புகளுக்கு பொருத்தம் இல்லாத வார்த்தைகள்” - வைகோ

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

 Supreme Court comments words that are not compatible with human dignity

இலங்கை தமிழர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், “உலக நாடுகள் பலவற்றிலிருந்து இங்கு பலர் வந்து அகதியாகத் தங்கி வருகின்றனர். அனைவரும் வந்து தங்குவதற்கு இது தர்ம சத்திரம் கிடையாது” கருத்து தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

அந்த வகையில் மதிமுக தலைவரும் எம்.பி.யுமான வைகோ உச்சநீதிமன்றத்தின் கருத்து மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாத வார்த்தைகள் என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை தமிழரான சுபாஷ்கரன் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல. இந்தியாவில் தொடர்ந்து தங்க உங்களுக்கு உரிமை இல்லை. இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால் வேறு நாட்டுக்கு சென்று புகலிடம் கோருங்கள்’ என்று தெரிவித்துள்ள கருத்து கவலைக்குரியது.

இலங்கை தமிழ் அகதிகளில் திரும்பிச் செல்ல விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை தமிழர்கள் இங்கு வாழ்கின்றனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள், அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாத வார்த்தைகள். நீதிபதிகள் இதுபோன்ற கருத்துகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். 

சார்ந்த செய்திகள்