
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபகீம் ஷேக் (35). இவரது மனைவி ஃபவுசியா (27). அஜண்டா பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதி, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் சில வருடங்களாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அயத் ஷேக் என்ற 4 வயது சிறுமியை, முறையாக தத்தெடுக்காமல் அவரது பெற்றோரிடம் இருந்து ஃபகீம் ஷேக் தம்பதி ரூ.5,000க்கு வாங்கியுள்ளனர். குழந்தையை வாங்கியது முதல் அவரை, ஃபவுசியா தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று சிறுமியை ஃபவுசியா மற்றும் ஃபகீம் இருவரும் கொடூரமாக அடித்ததில், சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து படுகாயமடைந்த சிறுமியை, தம்பதி இருவரும் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, தம்பதியினர் இருவரும் சிறுமிக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், இதில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தம்பதி இருவரையும் கைது செய்தனர். மேலும், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையாக தத்தெடுக்காமல் பணத்தின் மூலம் குழந்தையை தத்தெடுத்ததால், அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.