Skip to main content

“100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பா.ஜ.க.வினரிடம் கேள்வி கேட்கும் நிலை உருவாகும்” - அமைச்சர்!

Published on 31/03/2025 | Edited on 31/03/2025

 

Minister I Periyasamy says 100 day workers will be question to BJP

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த செய்திக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மறுப்பு தெரிவித்து அறிக்கை விட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், இவ்வளவு தொகை என்று ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மாறாக, எவ்வளவு மனித சக்தி நாட்கள் என்றுதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது தொழிலாளர் மதிப்பீடு எனப்படுகிறது.

அது போலவே, ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளொன்றிற்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் எவ்வளவு என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, 2024-25- ஆம் ஆண்டிற்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு முழுமையாக வேலை செய்யும் பட்சத்தில் ரூ.319 வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணா மலை  கூறியது போல இதர மாநிலங்களை விடத் தமிழ்நாடு இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக நிதி பெற்றுள்ளது என்பது உண்மையான தகவலே ஆகும். அவ்வாறு அதிக நிதி பெற்றதற்கான காரணம் தமிழ்நாடு இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்தியதே காரணமாகும் தமிழ் நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்பாடு குறித்த முக்கியமான மூன்று அம்சங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஒரு தேவை சார்ந்த திட்டமாகும் மேலும் தமிழகத்தில் எப்போதும் அதிக மான தேவை உள்ளது. முதல் காரணம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையைத் தவிர மற்ற காலங்களில் பெரும்பாலும் வறண்ட காலநிலை நிலவுகிறது. இதனால், ஊரக மக்கள் வேலைக்குப் பெரிதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை சார்ந்திருக்கின்றனர்.

இரண்டாவது காரணம்: தமிழக அரசின் திறமையான செயல் பாட்டு முறைகள். அரசு முன்கூட்டியே செயல் திட்டங்களைத் தயாரித்து, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பணிகள் தயாராக இருப்பதை உறுதி செய்கிறது. உதாரண மாக, 2025–26 ஆம் ஆண்டிற்கான வேலைத் திட்டங்களை ஏற்கனவே 2025 மார்ச் மாதத்திலேயே தயார் செய்து இறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது காரணம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெரும் பாலும் பெண்கள் மற்றும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சமூகங்களுக்குப் பயனளிக்கிறது. தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயனாளர்களில் 86சதவீதம் பெண்கள், 30சதவீதம் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினராவர். எனவே, இத்திட்டத்தின் கீழ் நிதியைக் குறைப்பது அல்லது நிறுத்துவது, நேரடியாகப் பெண்கள் மற்றும் பிற பின்தங்கிய சமூகத்தினரைப் பாதிக்கும் என்றதோடு இந்த முன்கூட்டிய திட்டமிடும் நடைமுறை பெரும்பாலான மாநிலங்களில் இல்லை என்பதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தமிழ்நாட்டில் மிகுந்த திறனுடன் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட த்தை தமிழக அரசு திறம்பட செயல்படுத்தியதற்காக பிரதமர் மற்றும் ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சரிடமிருந்து விருதுகளைப் பெற்றுள்ளது. இது தமிழகத்தின் திறமையான செயல்பாட்டிற்கான உறுதியான ஆதாரமாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-ன் படி மாநிலங்களின் மக்கள் தொகை, ஊராட்சிகளின் எண்ணிக்கை என்ற எந்த வேறுபாடும் குறிப்பிடப்படாமல் ஊரகப்பகுதிகளில் வேலை கோரும் அனைவருக்கும் வேலை வழங்கப்படவேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 2006 முதல் 2016-17 வரை ஒரு ஆண்டிற்கு பதிவு செய்துள்ள குடும்பங்களுக்கு வேலை வழங்க போதுமான தொழிலாளர் மதீப்பீடு ஒன்றிய அரசால் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலேயே முழுமையாக வழங்கப்பட்டு வந்தது.

2017-18 முதல் 2024-25 (2018-19 தவிர்த்து) வரை நிதியாண்டின் தொடக்கத்தில் இலக்கீடு குறைத்து வழங்கப்பட்டு, வழங்கப்பட்ட மனித சக்தி நாட்கள் முழுவதும் எய்தியபிறகே பல்வேறு கட்டங்களாக கூடுதல் மனித சக்தி நாட்கள் ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாடு அதிக மனித சக்தி நாட்களை எய்தி வருவதை அறிந்த நிலையிலும் 2024-25 ஆம் ஆண்டிற்கு தொடக்கத்தில்  20 கோடி மனித சக்தி நாட்களை மட்டுமே ஒதுக்கியது. இருப்பினும், தற்போது வரை 30.52 கோடி மனித சக்தி நாட்கள் எய்தப்பட்டுள்ளது. மனித சக்தி நாட்களை உயர்த்தி திருத்திய தொழிலாளர் மதிப்பீடு தருமாறு கோரிய கருத்துரு இன்று வரை ஒன்றிய அரசில் நிலுவையி லேயே உள்ளது மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்ப டும் நாளொன்றிற்கான ஊதியம் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படை யில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசால் உயர்த்தி வழங்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் செலவினம் கூடுவது இயல்பான ஒன்றுதான். அதற் கேற்ப நிதியினை ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒதுக்காமல் குறைவான மனித சக்தி நாட்கள் ஒதுக்கி வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.

ஒன்றிய அரசால் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்க ளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு நாள் ஊதிய விவரம் பின்வருமாறு : இவ்வாறு, ஒன்றிய அரசால் அரசிதழ் அறிவிப்பு மூலம்  ஒப்பளிக்கப்டும் ஒரு நாள் ஊதியம் தமிழ்நாட்டிற்கு அதிகமாக உள்ளதால்,  செலவினம் அதிகமாக ஏற்படுகிறது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஒருபுறம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாளிற்கான ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் அதே வேளையில், இத்திட் டத்திற்கான ஆண்டு வாரியான ஒதுக்கீடு குறைக்கப்பட்டே வருகிறது. அவ்வாறு ஒன்றிய அரசால் கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதி விவரம் பின்வருமாறு, 2020-21 - 1,11,500 கோடி, 2021-22 - 98,000 கோடி, 2022-23 - 89,400 கோடி, 2023-24 - 86,000 கோடி, 2024-25 - 86,000 கோடி. மேற்குறிப்பிட்டுள்ளவாறு  2024-25 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 86,000 கோடி ருபாய் அளவிற்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. இதனால் நவம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் ஊதியம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதுபோல, 2025-26 ஆம் ஆண்டிற்கும் அதே 86,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 2025-26 ஆண்டிலும் மீண்டும் ஊதிய நிலுவை ஏற்படும் சூழலே உருவாகும்.

இத்திட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுவதால் இத்திட்டத்தை நிறுத்த இயலாது என்பதை தெரிந்து கொண்டு, இத்திட்டத்திற்கான நிதியை குறைப்பது, மனித சக்தி நாட்கள் இலக்கீட்டினை குறைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் இத்திட்டத்தினை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவது நிரூபணமாகிறது. தமிழ்நாட்டில் 85 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 109 லட்சம் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். இதில் 77 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 92 லட்சம் தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் செயல்திறன் தொழிலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். 2021-22 முதல் 2024-25 வரையிலான 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 67 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 77 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சராசரியாக 64 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 88 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் சராசரியாக 70 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 83 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதிகமான குடும்பங்கள் பணிசெய்வது, நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாள் ஊதியம் மற்ற மாநிலங்களை விட அதிகளவில் இருப்பது. ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. மேற்குறிப்பிட்ட காரணங்களால் உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு இணையான செலவினம் ஏற்படுவது பொதுவான ஒன்றே ஆகும். 2021-22 முதல் 2024-25 வரையிலான 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு ஆண்டிற்கு 52 மனித சக்தி நாட்கள் வேலை ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலமான ராஜஸ்தானில் - 57 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதர மாநிலங்களை பொறுத்தவரை, ஆந்திர பிரதேசம் - 52 நாட்கள், உத்திரபிரதேசம் - 47 நாட்கள், பீகார் - 45 நாட்கள், கர்நாடகா - 45 நாட்கள், மகாராஷ்டிரா - 45 நாட்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி மூன்று முக்கிய கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியக்கூறு 100 முழுமையாக ஒன்றிய அரசு வழங்குகிறது. கட்டுமான பொருட்கள் மற்றும் பணிகளுக்கான பொருட்கூறு 75 சதவீதம் ஒன்றிய அரசு மற்றும் 25 சதவீதம் மாநில அரசால் வழங்கப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு மாநில அரசுக்கான நிதி விகிதம் 60:40 என பாஜக மாநிலத் தலைவர் கூறியது தவறான தகவல் ஆகும். தமிழ்நாட்டில் கடினமாக வேலை செய்துள்ள தொழிளாளர்களுக்கு, அவர்கள் செய்த உழைப்புக்கான ஊதியத்தை மட்டுமே உடன் விடுவிக்கக்கோரி ஒன்றிய அரசு வலியுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை தணிக்கை செய்ய தமிழகத்தில் மிக வலுவான சமூக தணிக்கை அமைப்பு உள்ளது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும்  ஒரு முழு வார காலத்திற்கு பணிகளை ஆய்வு செய்து கிராம சபையுடன் கலந்தாலோசித்து, குறைகள், முறைகேடுகள், மற்றும் நிவர்த்தி செய்ய வேண்டிய அம்சங்களை தணிக்கையில் குறிப்பிடும் அத்தகைய குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது, தேவையான குறைபாடுகளுக்கு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, செலவின தொகை மீட்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

2024-25 ஆம் ஆண்டு வரை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சமூக தணிக்கை முடிக்கப்பெற்று, தேசிய அளவில் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது. இவ்வாறு சமூக தணிக்கை கண்காணிப்பு அறிக்கையின் அடிப்படையில் குறைகளை தீர்ப்பதில் தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. இது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் திறமையை வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி இணை செயலர், இயக்குநர், திட்ட அலுவலர்கள் என தொடர்ச்சியாக தமிழ் நாட்டிற்கு வந்து கள ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் ஆய்வுக்குறிப்புகளுக்கு பதில்கள் மற்றும் நடவடிக்கை விவரங்கள் உடனடியாக ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டு வருகின்றது. உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற பரப்பளவில் மற்றும் மக்கள் தொகையில் அதிகம் உள்ள மாநிலங்கள் தமிழ் நாட்டைப் போன்று, இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி ஒன்றிய அரசிடமிருந்து அதிக நிதி பெறுவது எப்படி என ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, சிறப்பாக செயல்படும் தமிழ் நாடு அரசின் நிர்வாகத்தினை பாஜக மாநில தலைவர் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?.

மேலும், இதர சில மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டு மக்கள் கல்வி, மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு திட்டங்கள் தொடர்பான புரிதல் ஆகியவை குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளதால் இத்திட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி அதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெரும்பாலும் பெண்கள் மற்றும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு பயனளிக்கிறது. தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயனாளர்களில் 86சதவீதம் பெண்கள், 30சதவீதம் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினராவர். எனவே, இத்திட்டத்தின் கீழ் நிதியை குறைப்பது அல்லது நிறுத்துவது, நேரடியாக பெண்கள் மற்றும் பிற பின்தங்கிய சமூகத்தினரை பாதிக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005இன் மூலம் மற்றும் ஒன்றிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின் படி மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இதர மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறப்பான முறையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே பெரிய மாநிலங்களுக்கு நிகரான நிதியினை பெற்று வருகிறது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் திறமையான செயல்பாட்டை குறைத்து மதிப்பீடு செய்வதை தவிர்த்துவிட்டு, ஒன்றிய  அரசு மற்ற மாநிலங்களுக்கும் தமிழகத்தின் சிறந்த நடைமுறைகளை உதாரணமாக கொண்டு செல்ல வழி வகுக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நிதியை குறைப்பது, மனித சக்தி நாட்களை குறைப்பது போன்று இத்திட்டத்தினை நீர்த்து போகும் நடவடிக்கைளை தவிர்த்து தமிழ் நாடு போன்று அனைத்து மாநிலங்களையும் சிறப்பான செயல்பாட்டை மேற்கொள்ள ஊக்குவித்து கூடுதல் நிதியினை வழங்க, ஒன்றிய அரசு கேட்டுக்கொள்ளப்படுகிறது” இவ்வாறு அமைச்சர் ஐ. பெரியசாமி தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் அவர் கூறுகையில், “தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்கும் நிலையில் மத்திய அரசு செயல்பட்டாலோ அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை நிறுத்தி வைத்தாலோ தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழைகள் பா.ஜகவினரை நேரடியாக கேள்வி கேட்கும் நிலை உருவாகிவிடும்” என்று எனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 

சார்ந்த செய்திகள்