விலங்குகளில் மிகப்பெரியது யானை. அதற்கு கோபம் வந்தால் ஒரு ஊரையே அழித்துவிடும் அந்த அளவுக்கு பலம் வாய்ந்த யானைக்கு அதன் பலம் அதற்கே தெரியாது என்பார்கள். அது உண்மை தான் போல. நாய் ஒன்று துரத்தியதில் 30 வயதான யானை ஓடியதில் அடிப்பட்டு ஹார்ட் அட்டாக் வந்து இறந்தது.
பிரபலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு, பிரம்ம தீர்த்தம் அருகே கட்டிவைக்கப்பட்டு தினமும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும். இதற்கு முன்பிருந்த யானை செந்தில்வடிவுக்கு மதம் பிடித்ததால் அந்த யானை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்பே ருக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்தது. யானை ருக்கு 30-4-1988ம் ஆண்டு பிறந்தது. அதற்கு 7 வயதாகும்போது ரூபாய் 5 ஆயிரத்துக்கு வாங்கி வனத்துறை மூலம் 1995ஆம் ஆண்டு மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அண்ணாமலையார் கோவிலுக்கு தானமாக வழங்கினார். காட்டில் இருந்து வந்து கோயில் யானையாக வளர்ந்து வந்தது. தற்போது அதன் வயது 30.
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நல்வாழ்வு முகாமிற்கு சென்றது கடந்த மாதம் தான் திரும்பிவந்தது. இந்நிலையில் 5 டன் எடை கொண்ட கோவில் யானை ருக்கு 21ந்தேதி இரவு, வழக்கம் போல் கோவில் யானை மண்டபத்தில் யானை கட்டி இருந்த போது நாய் யானையின் காலுக்கு அடியில் சென்றது. இதனால் பயந்து போன ருக்கு கத்தியது. நாயை விரட்டிவிட்டு யானை பாகன்கள் அருகில் உள்ள யானை பாராமரிக்கும் மண்டபம் அருகில் ருக்குவை வாக்கிங் அழைத்து சென்றனர். அப்போது நாய் மீண்டும் யானை அருகே வந்ததால் மிரண்டு போன ருக்கு அருகில் உள்ள இரும்பு கம்பம் மீது இடித்ததில் இடது கண்ணில் பலத்த காயம் அடைந்து. உடனே மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இரவு 12.30க்கு நெஞ்சுவலி வந்து யானை ருக்கு துடிதுடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீண்டும் வந்த கால்நடை மருத்துவர்கள் கோவில் யானை ருக்கு இறந்தாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கோவில் யானை ருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.
இதனை தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் கோவிலின் வெளிபுற சுற்று சுவர் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என திருக்கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர். இன்று வழக்கம் போல் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்படும். ஆனால் ருக்கு நல்லடக்கத்திற்கு பின்னரே சுவாமிக்கு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 22ந்தேதி மதியம் 12 மணி வரை நூற்றுக்கணக்கான அண்ணாமலையார் பக்தர்க்ள் ருக்குவுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்பு கிரேன் மூலம் அது இறந்த இடத்தில் இருந்து அகற்றி கோயிலின் மற்றொரு புறத்தில் அதனை நல்லடக்கம் செய்தனர்.
ருக்குவின் தாய் முதுமலையில் வயதான நிலையில் உள்ளது. ருக்குவின் அண்ணன் வனத்துறையால் கும்கியாக பயிற்சி வழங்கப்பட்டு முரட்டு யானைகளை அடக்கும் யானையாக தில்லாக வலம் வந்துக்கொண்டுள்ளது. ருக்குவோ நாய்க்கு பயந்துப்போய் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.