Skip to main content

நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பளிப்பது சாத்தியம் ஆகாதா? வைரமுத்து கேள்வி

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
vairamuthu


ராஜஸ்தானிலும், உத்தரப்பிரதேசத்திலும் நீதிமன்றங்களில் இந்தி மொழியில் தீர்ப்பு சொல்லும் போது, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மட்டும் நீதிமன்ற மொழியாக இருக்க முடியாதா என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழாற்றுப்படை என்ற தலைப்பில் மறைமலையடிகள் குறித்த வைரமுத்துவின் கட்டுரை அரங்கேற்றம், சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது,

ஒரு மொழி பெருமையும், உரிமையும் பெற வேண்டும் என்றால், அதிகார மையங்களில் அது நின்று நிலவ வேண்டும். மாநில அரசு அலுவலகங்களில், தமிழ்நாட்டுக்குள் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில், நீதிமன்றங்களில், கல்விக்கூடங்களில், ஊடகங்களில், ஓர் இனத்தின் அன்றாடப் பேச்சுவழக்கில் அது தொடர்ந்து நிலைபெற வேண்டும்.

vairamuthu


நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழ் திகழ வேண்டும் என்பது, தமிழர்களின் நீண்ட நாள் கனவு. ஆனால், மத்திய அரசு அண்மையில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க மறுத்திருக்கிறது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேச நீதிமன்றங்களில் இந்தியில் தீர்ப்பளிப்பது நடைமுறையில் இருக்கும்போது, தமிழில் தீர்ப்பளிப்பது மட்டும் சாத்தியம் ஆகாதா?

தமிழ்நாட்டில் இனி எந்தக் கட்சியும், தமிழ்மொழி குறித்த கொள்கை வரைவை முன்வைத்தே தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும். தமிழ்ப் பண்பாடு அன்பையும், சகிப்புத்தன்மையையும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதை முடிந்தவரை பின்பற்றுவோம். தாக்குவதல்ல வீரம், தாங்குவதே வீரம். பொறுமை காப்போம், ஒற்றுமையால் தமிழ் இனத்தை கட்டிக்காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

சார்ந்த செய்திகள்