Skip to main content

அவர் ஒரு அற்புதமான குழந்தை... கண்கலங்கிய மயில்சாமி...

Published on 07/06/2018 | Edited on 08/06/2018
mayilsamy


நான் எந்தக் கட்சியையும் சாராதவன். எம்.ஜி.ஆர். பக்தன் அவ்வளவுதான். ஆனால் நியாத்தை பேசுவதற்கு இடம், பொருள் பார்ப்பதே இல்லை. இப்பயெல்லாம் இருக்கும்போது இரண்டு பேருக்கு உடல்நிலை சரியில்லை. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஒரு டிராக் ஓடுது. கலைஞர் அய்யாவுக்கும் ஒரு டிராக் ஓடுது. இதை பார்த்துக்கிட்டே இருக்கிறோம். அப்பல்லோவுல என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இங்கே, கலைஞர் ஆஸ்பத்தியில் இருக்கும் போட்டோவை காட்டுகிறார்கள். டி.வி. பார்ப்பதை காட்டுகிறார்கள். உடனே ஜனங்கள், தொண்டர்கள் பார்க்கிறார்கள். தலைவர் டி.வி. பார்க்கிறார், காரில் போகிறார் என்று டி.வி.யில் பார்த்து உற்சாகமடைகிறார்கள். 

 

 


அதற்கு பின்னர் கொஞ்ச நாள் கழித்து முரசொலி அலுவலகத்திற்கு கலைஞர் வருவதை காண்பித்த உடனே மக்களுக்கு ஒரே சந்தோஷம். என் தலைவன் கட்சி ஆபீஸ் வரைக்கும் வந்துவிட்டார் என்று. இதை எல்லாவற்றையும் விட கலைஞரால் என் மனம் எங்கே பாதிக்கப்பட்டது. எனக்கு ரொம்ப இலகிய மனது. அதேநேரம் அரசியல்வாதிகளை பார்த்து அவ்வளவு சீக்கிரம் இலகிட மாட்டேன். ஆனால் என் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்த விஷயத்தை சொல்கிறேன். 

கலைஞர் அய்யாவை எல்லோரும் போய் பார்க்கிறார்கள். எல்லா கட்சிக்காரர்களும் சென்றார்கள். திடீரென்று ஒரு நாள் பிரதமர் கலைஞரை பார்ப்பதாக டிவியில் செய்தி பார்த்தேன். அதில், கலைஞர் பிரதமரை பார்க்கவில்லை. அது நன்றாக தெரிகிறது. ஆனால் பிரதமர் மட்டும்தான் கலைஞரை பார்த்துக்கொண்டே இருக்கிறார். 

 

 

 

 


காதுல ஏதாவது அழுத்தம் திருத்தமா சொல்லிட்டாங்களோ அதனாலதான் திரும்பாம இருக்காரோ என நான் நினைச்சேன். ஒரு நாட்டின் பிரதமர் வந்திருக்கிறார் கொஞ்சம் திரும்பினா நல்லாயிருக்குமே என்று நினைச்சேன். பார்க்கவே இல்லை.

ஆனால் பிரதமர் வந்து சென்ற பின்னர், அந்த வீல் சேரில் வெளியே வந்த உடனேயே வெளியே கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையை தூக்கினார் கலைஞர். உண்மையிலேயே நான் சொல்கிறேன் தொண்டர்களாகிய நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க. 94 வயதில் ஒரு பாரத பிரதமரை அவருக்கு தெரிந்ததா தெரியலையா என்பதை விட்டுவிடுங்கள். ஆனால் உங்களை, தொண்டர்களை பார்த்தவுடன் கையை தூக்கிவுடனேயே உண்மையிலேயே நான் கண் கலங்கினேன். அவர் இன்று 94 வயதானாலும் தொண்டர்களை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார். நான் எம்ஜிஆர் பக்தனாக இருந்தாலும் கண் கலங்கிணேன். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரல்லவா கலைஞர். கட்சி ரீதியாக பார்க்க வேண்டாம். இவர்கள் இரண்டு பேரும் எப்படி இருந்திருப்பார்கள். எத்தனை இடங்களுக்கு ஒன்றாக நடந்து சென்றிருப்பார்கள். இதையெல்லாம் நினைத்து கண் கலங்கியது. 

 

 

 

 


அதற்கு பின்னர் முதல் முறையாக நானாக விருப்பப்பட்டு கலைஞரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் பார்க்கப்போகிறேன் என்று தெரிந்தவுடன் என் மனைவி நானும் வருகிறேன் என்றார். என் மகன்களும் நாங்களும் வருகிறோம் என்றார்கள். கலைஞரை பார்க்க அனுமதி கேட்டோம். அனுமதி கிடைத்தது. குடும்பத்துடன் சென்றேன். என் மனைவி அவர் கையை பிடித்துக்கொண்டு குழந்தை மாதிரியே இருக்கீங்க என்று அழுகிறாள். ஒரு மனிதன் பிறகும்போது குழந்தையாக இருப்பான். அதேபோல் இப்போது இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான குழந்தை. 

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் 95வது பிறந்தநாள் விழாவில் நடிகர் மயில்சாமி.