கோடான கோடி ரசிகர்களை வைத்திருக்கும் ஒரு விளையாட்டு தான் கால்பந்து. அந்த கால்பந்திற்கான 21-வது பிபா உலகக்கோப்பை இன்று ரஷ்யா தலைநகரான மாஸ்கௌவில் இரவு 8:30 மணிக்கு தொடங்க இருக்கிறது. உலகிலேயே மிக பிரமாண்ட விளையாட்டான இது இன்று ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது . இதன் மூலம் உலகக்கோப்பையை நடத்தும் 17 வது நாடாக ரஷ்யா உள்ளது . ரஷ்யா முதன்முறையாக கால்பந்து உலகக்கோப்பை போட்டியை நடத்துகிறது. இதனால் அந்த அணி உலககோப்பைக்கு நேரடியாக தேர்வானது மற்ற 31 அணிகளும் தகுதிச்சுற்றின் வாயிலாகவே தேர்வானது. இந்த 32 அணிகளில் 20 அணிகள் இதற்கும் முன் நடந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளிலும் தகுதிச் சுற்றில் தேர்வாகி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்லாந்து மற்றும் பனாமா நாடுகள் இந்த உலகக்கோப்பையில் மூலம் முதன் முதலாக கலந்துகொள்கின்றனர். அதேபோல எகிப்து அணி 28 வருடங்கள் கழித்தும், பெரு 36 வருடங்கள் கழித்தும், மொராக்கோ 20 வருடங்கள் கழித்தும், செனகல் 16 வருடங்கள் கழித்தும் களமிறங்குகின்றன. இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பையில் அதிகப்படியாக பிரேசில் அணி ஐந்து முறை கோப்பையை தங்கள் வசமாக்கியுள்ளது. இத்தாலி மற்றும் ஜெர்மனி அணிகள் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த ஆண்டு கால்பந்து போட்டியில் இத்தாலி அணி தகுதிச் சுற்றுடன் கிளம்பிவிட்டது என்பதுதான். ஜெர்மனி நான்கு முறை இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
ரஷ்யா உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெற உள்ளது. உலகிலேயே பெரிய நாடான ரஷ்யாவில் உள்ள பதினோரு நகரங்களில் இந்த உலகக்கோப்பைக்காக கட்டப்பட்ட மற்றும் புதிதாக மாற்றப்பட்ட 12 மைதானங்களில் நடக்க இருக்கிறது. இன்று போட்டியை நடத்தும் ரஷ்யா, சவூதி அரேபியாவுடன் விளையாட இருக்கிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு மாலை 6:30 மணியளவில் கோலாகலமான விழாக்களுடன் தொடங்க இருக்கிறது. இந்த விழா வெறும் அரைமணிநேரமே நடைபெறுவதாக இருந்தாலும் உலகின் மிகப்பெரிய பிரபலங்களான ஆங்கில பாடகர் ராபியே வில்லியம்ஸ், ரஷ்ய பாடகி ஐடா கரிபுல்லினா மற்றும் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், நிக்கி ஜாம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட உள்ளது.