முத்தம் என்பது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வழி என்றுதான் உலக இலக்கியத்தில் ஆரம்பித்து உள்ளூர் இலக்கியம் வரை தெரிவித்திருக்கின்றன, நாமும் நம்பியிருக்கிறோம். முத்தம் தன்னுடைய துணையான மனைவிக்கோ அல்லது கணவனுக்கு மட்டுமோ கொடுக்கப்பட வேண்டும் என்பது கிடையாது. அது நண்பர்களுக்குள்ளும் உறவுகளுக்கும் ஆசையாய், அன்பாய் பரிமாறிக்கொள்ளும் ஒரு விஷயமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். முத்தத்தில் பல வகைகள் இருக்கின்றன. அந்த வகைகளை இங்கு பேசவில்லை, முத்தத்தால் என்னென்ன உடல் ரீதியான பயன்கள் இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்டதை இந்த உலக முத்த தினத்தில் (06 ஜூலை) தெரிந்துகொள்வோம்.
முத்தத்தால் விளையும் ஒரு பயனை நாமனைவரும் அறிந்திருப்போம். அதுதான், முத்தம் அதிக நேரம் கொடுத்தால் உடலில் 8-16 கலோரிகளை குறைத்துவிடும் என்பது. இது 'துப்பாக்கி' படத்தில் ஒரு வசனமாக வந்த பின்பு காதலிக்கு முத்தம் தர விரும்பும் காதலர்கள் இதையே எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். கலோரி குறைப்பது மட்டுமல்ல, இந்த முத்தத்திற்கு வேறு சில சிறப்புகளும் இருக்கின்றன.
உயிரியல் ரீதியாக முத்தத்தின் போது என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம். ஒரு ஆண், பெண்ணின் உதட்டில் கொடுக்கும் முத்தத்தின் போது ஆண்களின் டெஸ்டோஸ்ட்டிரான் என்னும் காதல், காமத்துடன் தொடர்புடைய ஹார்மோன் பெண்களின் வாய்க்குள் சென்று ம்யூகஸ் மெம்ப்ரேன் வழியாக ஊடுருவுகிறது. இது காதல் உணர்வைத் தூண்டுகிறது. காதல் பெறுகுவதால் முத்தம் உருவாகிறதா, முத்தம் தருவதால் காதல் பெறுகுகிறதா என்று கேட்டால், கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்றுதான் பதில் கிடைக்கும் போல. எதனால் எது வந்தாலும் இதனால் இன்பம்தானே?
மேலும் முத்தம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து தலைவலியை நீக்கும். மேலும் முத்தம் என்பது செரோடோனின், டோபமைன், ஆக்சிடாஸின் ஆகியவற்றை சுரக்கச் செய்து நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். இன்னொரு ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? காலையில் வேலைக்கு செல்லும் முன் மனைவியிடம் முத்தம் வாங்கிச் செல்பவர்கள் சிறப்பாக வேலை செய்வதாகக் கூறுகிறது. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்கிறீர்களா?
இது போக முகத்திலிருக்கும் தசை சீராகி, முகப்பொலிவு கிடைக்கும். முத்தத்தால் எச்சில் அதிகமாக ஊறி, பற்கள் சொத்தையாவதைத் தடுக்கும். இத்தனை நன்மைகள் இருக்கிறதாம் முத்தத்தில். ஆனால், ஒரு கண்டிஷன், இந்த நன்மைகளில் பெரும்பாலானவை ஃபிரென்ச் கிஸ்களின் மூலம் கிடைப்பவை. தமிழ் முத்தங்களுக்கு இத்தனை நன்மை இல்லையாம். தமிழராக இருந்தால் இதை ஷேர் செய்யுங்கள். (அடிக்க வராதீர்கள் நண்பர்களே, போய் உங்கள் முத்தம் கொடுங்கள், நன்மை இருக்கிறது)