அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதில் சந்தேகத்திற்கே இடமில்லை, அம்மா ஆட்சி விரைவில் அமையும்" என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்ற பொருள்படும்படி கல்வெட்டைத் திறப்பது, அதிமுக கொடியைப் பயன்படுத்துவது என தனி ரூட்டில் சென்றுகொண்டிருக்கிறார். அதிமுகவில் நடப்பது என்ன, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பன போன்ற கேள்விகளை மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜ் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
அதிமுகவின் பொன்விழா ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? அதிமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறீர்களா?
ஓ.. எனக் கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. எம்ஜிஆர் இந்த இயக்கத்தை எப்படி உருவாக்கினார். மக்கள் செல்வாக்கில் அதிமுகவை முதலிடத்திற்கு கொண்டு சென்றார். மக்கள் கூட்டம் என்று கூட சொல்லக் கூடாது. மக்கள் வெள்ளத்தை அதிமுகவுக்கு கொண்டு வந்தார். ஆனால் இந்த இயக்கம் தற்போது எப்படி இருக்கிறது. ஜெயலலிதா அதிமுகவை பாதி அழித்தார், எடப்பாடி பழனிசாமி சவப்பெட்டி வாங்கி தற்போது ஆணி அடித்துள்ளார். பொன்விழாவில் என்ன இருந்தது, ஒன்றுமில்லை. பொன் மட்டும்தான் அவர்களிடம் இருக்கிறது, விழாவைக் காணோம்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் அதிமுகவுக்கு எதிர்காலம் இனி இல்லை என்று தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். இனி எப்படி அதிமுகவுக்கு எதிர்காலம் இருக்கப்போகிறது. அதற்கான வாய்ப்புகள் கண்ணுக்குத் தெரிந்தவரை ஏதாவது இருக்கிறதா என்றால், அப்படி எதுவும் இல்லை. தமிழகத்தில் நடைபெறுகின்ற எந்தப் பிரச்சனைகளுக்காவது எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளாரா? நீங்கள் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நேராக அண்ணாமலையிடம்தானே செல்கிறீர்கள். அண்ணாமலை நீண்டகாலமாக அரசியலில் இருக்கிறாரா என்ன? இப்போதுதானே 4 பேர் அந்தக் கட்சியிலிருந்து சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள். செந்தில் பாலாஜி மீது எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிதானே கூற வேண்டும், வழக்கு தொடுக்க வேண்டும். ஆனால் அண்ணாமலைதானே அனைத்திற்கும் பதில் சொல்கிறார், கருத்து தெரிவிக்கிறார். நிலைமை அப்படியிருந்தால் அதிமுகவுக்கு எங்கே எதிர்காலம் இருக்கப் போகிறது என்பதே என்னைப் போன்றோரின் கேள்வியாக இருக்கிறது.
அதிமுகவை இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒழித்துக்கட்டிவிட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து நீண்டநாட்களாக பாஜக சாயலில் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள். அதிமுகவின் எம்.பி. ரவீந்திரநாத் லெட்டர் பேடில் யார் படம் இருக்கிறது, எம்ஜிஆர், ஜெயலலிதா படமா இருக்கிறது, மோடி படம் இருக்கிறது, இவர்கள்தான் அதிமுகவை வாழவைப்பவர்களா? அதிமுகவுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இல்லாத அதிமுகவுக்கு என்ன பொன்விழா வேண்டி கிடக்கிறது. நான்கு மாதத்திற்கு முன்புவரை இவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தவர்கள். உள்ளாட்சித் தேர்தலில் என்ன வெற்றி பெற்றார்கள், மிக கேவலமான தோல்வியைப் பெற்றுள்ளார்கள். 60 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறுகிறீர்கள், அந்த எம்எல்ஏக்கள் பின்னணியில் தற்போது மக்கள் இருக்கிறார்களா? வென்ற அனைத்து எம்எல்ஏக்களும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இருந்து வெற்றிபெற்றார்களா? கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் என்று குறிப்பிட்ட பகுதியில் வென்றவர்கள்தானே இவர்கள் அனைவரும். பிறகு எப்படி அதிமுகவுக்கு இன்றளவும் செல்வாக்கு இருப்பதாக நம்புவது?
எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு எப்போதோ சவப்பெட்டி செய்து ஆணி அடித்துவிட்டார். இந்த ஜெயக்குமார் போன்றவர்கள் பார்த்துப் பேச வேண்டும். தங்களுக்கென்று கொள்கை இருக்கு, நாங்கள் என்ன குழந்தைகளா என்று கேள்வி கேட்பது அமித்ஷாவுக்கு தெரிந்தால் ஜெயக்குமார் அவ்வளவுதான். திமுக ரெய்டை கூட சமாளித்துவிடலாம், ஆனால் இவர்கள் கையில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என பல அயிட்டங்களை வைத்துள்ளார்கள், எனவே ஜெயக்குமார் கட்சிக்கு விரோதமாக, பாஜகவுக்கு எதிராக பேசக்கூடாது, அவர் நல்லதுக்காக! சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாரும் அதிமுக தலைவர்கள் இல்லை. இவர்கள் அனைவருக்கும் தலைவர் அமித்ஷா, அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி இங்கு நடப்பார்கள். முதலில் பன்னீர்செல்வத்தை பயன்படுத்திப் பார்த்தார்கள், பிறகு எடப்பாடி பழனிசாமியை பயன்படுத்தினார்கள். ஆனாலும் ஒன்றும் தேறவில்லை என்பதால் தற்போது சசிகலாவை பயன்படுத்தி பாஜகவுக்கு லாபம் கிடைக்குமா என்று கணக்கு போடுகிறார்கள். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.