Skip to main content

மூவரணி சீற்றம்.. பதறிப்போன ஓ.பி.எஸ்... அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

Published on 09/07/2019 | Edited on 10/07/2019

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க அனைத்துக கட்சிக் கூட்டம் சென்னையில் 08.07.2019 திங்கள்கிழமை மாலை துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

 

all party meeting



அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்துகளை விளக்கினார்.


எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல என்றும், அது சமூக நீதி என்றும், நீதிமன்றங்கள் கூறிய கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். அடுத்து பேசிய தேமுதிக பிரமுகர் டாக்டர் இளங்கோ, இதை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்றார். 

 

பாமக தலைவர் ஜி.கே. மணி பேசும்போது, சாதி வாரி இட ஒதுக்கீடு மூலம் 100 சதவீத இடஓதுக்கீடு வேண்டும் என்றும், அதில் உயர் சாதிக்கும் கொடுக்கலாம் என கூறினார். ஆனால் இந்த பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்கவே கூடாது என்றார். 
 

மதிமுக சார்பில் பேசிய மல்லை சத்யா, இதில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருக்கிறது, இட ஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்யும் அபாயம் இருக்கிறது என்பது குறித்தும் விளக்கமாக பேசினார்.
 

 விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் பேசும்போது, இது பாஜகவின் சூழ்ச்சி என்று பேச, அதற்கு தமிழிசை எதிர்ப்பு தெரிவித்தார்.


அது போல் சீமான் பேசும் போது, டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசமாக குறுக்கிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைதிப் படுத்தினார். நீங்கள் தான் முன்னேறி விட்டீர்களே..? முன்னேறியவர்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு என சீமான் கிண்டலடிக்க... ஆசிரியர் வீரமணியும், ஸ்டாலினும் சிரித்தனர்.


பாஜக சார்பில் தமிழிசை இதை ஆதரித்துப் பேச, அதைவிட தீவிரமாக ஆதரித்து டாக்டர் கிருஷ்ணசாமி பேச கூட்டம் அதிர்ந்தது. 
 

காங்கிரஸ் சார்பில் பேசிய கோபன்னா, சி.பி.எம். சார்பில் பேசிய பாலகிருஷ்ணன் , தமாகா சார்பில் பேசிய ஞான தேசிகன் ஆகியோர் சில மாற்றங்களுடன் இதை ஆதரிக்க வேண்டும் என்றதும், ஸ்டாலின் சிரித்தப்படியே கவனித்தார். 


 

all party meeting


கமல்ஹாசன் மிக நிதானமான வார்த்தைகளில், இந்த இட ஒதுக்கீட்டை மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பதாக கூறினார்.
 

சி.பி.ஐ. சார்பில் பேசிய முத்தரசன் அவர்கள், இதை கடுமையாக எதிர்த்து, சி.பி.எம். நிலைப்பாடு வேறு, தங்கள் நிலைப்பாடு வேறு என உணர்த்தினார். அவர் கருத்தை ஒட்டியே , முஸ்லிம் லீக் சார்பில் பேசிய அபுபக்கரும் கருத்து கூறினார்.
 

த.கொ.இ.பே. சார்பில் தனியரசு பேசும்போது, ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல், போராடாமல், அந்த முன்னேறிய ஏழைகள் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் ஆதிக்கம் செய்கிறார்கள் என்றவர், பாமக, விசிக கருத்துகளை வழிமொழிந்து பேசினார். 
 

மஜக சார்பில் பேசிய தமிமுன் அன்சாரி, முன்னேறிய சமூகத்தில் உள்ள எந்த ஏழை 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கிறார்? பசி உள்ளவனும், ஏப்பம் விடுபவனும் ஒன்றா? அவர்கள் அல்வா கொடுக்கிறார்கள். அது அல்வா அல்ல, ஃபெவிகால் பசை என சாடினார்.

 

Thamimun Ansari



 

 

முக்குலத்தோர் புலிப் படை சார்பில் பேசிய கருணாஸ், பிராமணர் ஆதிக்கம் இருப்பதாகவும், புள்ளி விபரங்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு புரிய வைக்க முடியாது. ஆனால் பணிய வைக்க முடியும் என்றார்.
 

நிறைவாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், அரை மணி நேரத்தில் பல ஆதார நூல்களை எடுத்துக் காட்டி , ஒரு சமூக நீதி வகுப்பையே எடுத்து விட்டார். தமிழிசையை எனது அன்பு மகள் என கூறினார். அமைச்சர் விஜயபாஸ்கரையும் பாராட்டினார். எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ஆகியோர் சமூக நீதிக்காக ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து, இதன் வழியிலேயே தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றார். அதன்படி நல்ல முடிவெடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 

bjp-congress




கூட்டத்தில் இடையிடையே பொன்முடிக்கும், தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சை பலரும் ஆட்சேபித்தனர். ஒரு கட்டத்தில் கிருஷ்ணசாமி, இங்குள்ள முடிவை ஏற்க கூடாது, மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முரண்டு பிடிக்க, அது நடைமுறை சாத்தியமல்ல என தமிமுன் அன்சாரி உடனே மறுத்தார். அப்படியெனில், நீட் தேர்வுக்கும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவோமா? என தனியரசு சீறினார். டென்ஷனான கருணாஸ் கூட்டத்தை முடிங்க என பாய, மூவரணியின் சீற்றத்தை கண்டு, ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் விஜயபாஸ்கரும் பதறிப் போயினர்.
 

ஒரு வழியாக, சமூக நீதி காத்த அம்மா வழியில் முடிவெடுப்போம் என்று கூறி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தை நிறைவு செய்தார். பிறகு எல்லோரையும் அவரும், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, அன்பழகன் ஆகியோரும் சிரித்தப்படியே வழியனுப்பி வைத்த பிறகே பெருமூச்சு விட்டனர்.

சார்ந்த செய்திகள்