உலகமெங்கும் உள்ள பக்தர்களை அவர்களது நோய்களில் இருந்து குணப்படுத்துவேன் என்ற சொன்ன நித்யானந்தாவுக்கு இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் அவரது ஆசிரமவாசிகள். சமீபத்தில் கோவை மீடியா என்கிற செய்தி நிறுவனம் நித்யானந்தாவின் கைலாசா நாட்டை பற்றி உண்மைத் தகவல்களை வெளியிடப் போவதாக அறிவித்தது. அதற்கான டிரெயிலரும் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த டிரெயிலர் ஒரு மணி நேரத்திலேயே காணாமல் போய்விட்டது. அதற்கு காரணம் நித்யானந்தாவின் பக்தர்கள், எதுவும் வெளியிட வேண்டாம் எனச் சொன்னதால்தான்.
அந்த காணொளியில் பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமம் காட்சிப்படுத்தப்பட்டது. அதில் யாரும் இல்லை. சுடுகாடு போல காணப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் ராஜபாளையம், சேலம், திருவண்ணாமலை பகுதியில் இருக்கக்கூடிய ஆசிரமங்கள் செயலிழந்து நிற்கின்றன.
கடந்த 2018 ஜூன் மாதம் 6-ஆம் தேதி நித்யானந்தாவுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை அவரிடம் வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கடந்த 4 வருடங்களாக நித்தி இந்தியாவில் இல்லை. நித்திக்கு எதிரான வழக்கில் 60 முறை கோர்ட் நித்திக்கு சம்மன் கொடுத்திருக்கிறது. அவருக்கு எதிராக இன்டர்போல் மூலம் கைது செய்யும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே ஜனார்த்தன சர்மா என்பவரின் இரண்டு மகள்களைக் கடத்திக் கொண்டு சென்றதாக குஜராத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில், எங்களை யாரும் கடத்தவில்லை என கடத்தப்பட்டதாக சொல்லப்படும் இரண்டு பெண்களும் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஜமைக்காவில் உள்ள நீதிமன்றத்தின் தூதரக அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்கள். அவர்களை "நீங்கள் ஜமைக்காவை விட்டு வெளியே செல்லக்கூடாது' என குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பார்த்தால் நித்தி மேற்கிந்தியத் தீவு பகுதிகளில் உள்ள ஒரு தீவில் ஒளிந்துகொண்டு கைலாசா என படம் காட்டிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்தில் வனவாட்டா என்கிற தீவில் தான் கைலாசா நாடு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இயங்கும் கருடா ஏர்வேஸ் மூலம் நீங்கள் கைலாசாவுக்கு வரலாம் என நித்தி தனது வீடியோவில் பேசி இருந்தார். அந்த தீவில் கைலாசா பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் ஒரு வங்கிக் கணக்கையும் ஆபரேட் செய்து வந்தார். அந்த வங்கிக் கணக்கு சமீபத்தில் மூடப்பட்டுவிட்டது. எனவே நித்தி வனவாட்டாவில் இல்லை. ஆனால் அங்கு இருக்கக்கூடிய மேற்கிந்தியத் தீவுகளின் வட்டாரத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.
அவர் பொதுவாக உடற்பயிற்சிகள் எதையும் செய்யும் பழக்கத்தைக் கொண்டவர் இல்லை. ஆனால் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பார். அவருக்கு ஜுரம் வந்தால் கூட வெளியே தெரியாது. ஏனென்றால் மற்றவர்களின் வியாதியை குணப்படுத்துபவர் எப்படி தனக்கு வந்த வியாதியை வெளியே சொல்லுவார். இப்பொழுது அவர் வெளியிடும் பதிவுகளில் "ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை. இருபது நிமிடம்கூட தூங்க முடியவில்லை' என பிதற்றியிருக்கிறார். ஆனால் நான் நல்ல உடல் நிலையில் இருக்கிறேன் சமாதியில் இருக்கிறேன், எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்கூட என்ன வியாதி என்று கண்டுபிடிக்க சிரமப்படுகிறார்கள்' என கூறுகிறார்.
உண்மையில் நித்திக்கு என்ன என அவருக்கு நெருக்கமான பக்தர்கள் வட்டாரத்தில் கேட்டோம். இதுபற்றி உண்மையை சொல்லக்கூடிய ஒரே ஒரு ஆள் ரஞ்சிதா மட்டுமே. அவர் நித்தியுடன் இருக்கிறார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, அளவுக்கு அதிகமான வயாகரா போன்ற மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு கிட்னியும் நித்தியானந்தாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றரை வருடங்களாக நித்தியானந்தாவின் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. அவருக்கு வருமானம் இல்லை. தலைமறைவாக இருக்கும் நித்தியை மருத்துவமனையில் சேர்த்தால் அது செய்தியாகிவிடும். அவரை அவர் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டின் சட்டவிதிகள்படி இந்திய போலீஸ் சர்வதேச உதவியுடன் கைது செய்துவிடும். அதனால் ஒரு கருணைப் பார்வை அரசாங்கம் தன் மீது காட்டாதா? நான் ஒரு இந்து சாமியார் என மத்திய பா.ஜ.க. அரசுக்கு செய்தி அனுப்ப நித்தி முயல்கிறார் என்கிறார்கள்.
"மொத்தத்தில் விதி வலியது. நோயில் தவிக்கும் நித்தி விரைவில் நலம் பெறவேண்டும் என்பது பக்தர்கள் உள்ளிட்ட அனைவரின் விருப்பம். அதன்பின், சட்டத்தின் வலையில் சிக்கிக் கொள்வார்' என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.