ஐஆர்சிடிசி இணையதளத்தைப் பயன்படுத்தி 30 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து சைபர் செக்யூரிட்டி வினோத் விளக்குகிறார்
ஐஆர்சிடிசி இணையதளத்தை ஹேக் செய்வது இயலாத காரியம். அதற்கான செக்யூரிட்டி வலுவாக இருக்கும். ஆனால் அதில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது. அந்த இணையதளத்தில் ஒரே நேரத்தில் மீண்டும் மீண்டும் டிக்கெட் புக் செய்ய முயன்றால் அது முடியாது. ஒரே நபர் அதிகமான டிக்கெட்டுகளை புக் செய்து கள்ளச்சந்தையில் விற்கக்கூடாது என்பதற்கான ஏற்பாடு தான் இது. முறைகேட்டில் ஈடுபட்டுள்ள இந்த நபர், வெவ்வேறு யூசர் ஐடி உருவாக்கக்கூடிய செயலியைப் பயன்படுத்தியுள்ளார்.
மீண்டும் மீண்டும் புக் செய்தாலும், இணையதளத்தை நம்ப வைக்கும் அளவுக்கு அவருடைய செயல்பாடு இருந்துள்ளது. எனவே அவர் டெக்னிக்கலாக மாட்டவில்லை. தொடர்ந்து ஒரே இடத்துக்கு நிறைய தட்கல் டிக்கெட்டுகள் புக் ஆனதால் தான் ஐஆர்சிடிசி நிறுவனத்தினர் உஷாராகியுள்ளனர். பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் ஒரு வெப்சைட்டை முடக்க முயலலாம். இந்த ரயில் இணையதளத்தை ஒருவர் முடக்க முயன்றால், அது இந்திய அரசுக்கே சவாலாக மாறிவிடும். இந்திய மக்கள் பலருடைய தகவல்கள் அதில் இருப்பதால், அவை திருடு போவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே தான் அந்த இணையதளத்தை ஹேக் செய்வது கடினமான ஒன்று.
இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்போது, இணையதளத்தை முடக்குவதும் முடக்காமல் இருப்பதும் சவால்தான். தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பதன் மூலம் தான் இதுபோன்ற தவறுகளை நம்மால் கண்டறிய முடியும். உங்களுக்கு வரும் லிங்கை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய தகவல்களை ஒருவரால் திருட முடியும். அதன் மூலம் உங்களுடைய வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுக்க முடியும். இந்தப் புரிதல் முதலில் அனைவருக்கும் வேண்டும். முடிந்த அளவுக்கு லிங்குகளை கிளிக் செய்யாமல் இருப்பதே நல்லது.
ஒருவேளை கிளிக் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். ஒருவேளை ஹேக் செய்ய முயற்சிக்கிறார்களோ என்கிற சந்தேகம் உங்களுக்கு வர வேண்டும். அந்த லிங்கை கிளிக் செய்த பிறகு பாஸ்வேர்ட் கேட்டால், எந்தக் காரணம் கொண்டும் கொடுக்கக்கூடாது. ஆதார் எண் உள்ளிட்ட எந்த தனிப்பட்ட தகவலையும் அதில் பரிமாறக்கூடாது. இறுதியில் உங்களுக்கு ஓடிபி வரும். அதையும் நிச்சயம் பகிரக்கூடாது. உங்களுடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்கிற சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக வங்கியில் சொல்லி பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் மாற்ற வேண்டும்.
தற்காலிகமாக அக்கவுண்ட்டை முடக்கியும் வைக்கலாம். உடனடியாக 1930 என்கிற சைபர் கிரைம் எண்ணுக்கு அழைத்து புகார் கொடுக்கலாம். எவ்வளவு விரைவாக நீங்கள் புகார் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்களுடைய பணம் திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.